'இனி என்ட மாநிலம் கேரளா அல்ல கேரளம்' - சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
|கேரளா மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என மாற்ற சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் பெயரான 'கேரளா' என்பதை 'கேரளம்' என பெயர் மாற்றம் செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அரசியல் சாசனம் மற்றும் ஆவணங்களில் மாநிலத்தின் பெயர் 'கேரளம்' என மாற்றம் செய்ய அரசு விரும்பியது.
அங்கு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது .அதில் கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என மாற்ற மத்திய அரசை வலியுறுத்தும் மசோதாவை சட்டமன்றத்தில் மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தாக்கல் செய்தார். மாநிலத்தின் பெயரை 'கேரளா' என்பதில் இருந்து 'கேரளம்' என்று அதிகாரப்பூர்வமாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி முதல்-மந்திரி தீர்மானம் கொண்டு வந்தார். மாநில பெயர் மாற்ற தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று இன்றே சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேறி உள்ளது.