< Back
தேசிய செய்திகள்
ராஜூ ஶ்ரீவஸ்தவா உடலுக்கு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரேத பரிசோதனை - எய்ம்ஸ் தகவல்
தேசிய செய்திகள்

ராஜூ ஶ்ரீவஸ்தவா உடலுக்கு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரேத பரிசோதனை - எய்ம்ஸ் தகவல்

தினத்தந்தி
|
22 Sep 2022 5:28 AM GMT

ராஜூ ஸ்ரீவஸ்தவா உடலுக்கு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் தடயவியல் துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பாலிவுட்டில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் அறியப்படுபவர் நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா (வயது 59). கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி காலை டெல்லியில் உள்ள ஜிம் ஒன்றில் ராஜூ ஶ்ரீவஸ்தவா உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்தார். அதன்பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். 40 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் ராஜூ ஸ்ரீவஸ்தவா நேற்று உயிரிழந்தார்.

இந்த நிலையில் ராஜு ஸ்ரீவஸ்தவாவின் உடல் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது என்று எய்ம்ஸ் தடயவியல் துறைத் தலைவர் டாக்டர் சுதிர் குப்தா தெரிவித்துள்ளார். உயர் தொழில்நுட்ப டிஜிட்டல் எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் உதவியுடன் ராஜூவின் உடல் மெய்நிகர் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுதிர் குப்தா கூறும்போது, வழக்கமான பிரேத பரிசோதனையை விட மெய்நிகர் பிரேத பரிசோதனைக்கு குறைவான நேரமே ஆகிறது. மெய்நிகர் பிரேதப் பரிசோதனை முடிவுகளை எக்ஸ்ரே படங்களின் வடிவத்தில் ஆவணப்படுத்தப்படலாம். இந்த எக்ஸ்ரே ஆவணங்களுக்கு முழுமையான சட்ட ஆதார மதிப்பு உள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மெய்நிகர் பிரேத பரிசோதனை செய்து வரும் ஒரே நிறுவனம் டெல்லி எய்ம்ஸ் ஆகும் என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்