கியூட் தேர்வுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு; தேசிய தேர்வு முகமை தகவல்
|கியூட் தேர்வுக்கான புதிய தேதிகள் பற்றிய அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டு உள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்துகிறது.
நடப்பு கல்வி ஆண்டுக்கான இளங்கலை படிப்புக்கான கியூட் தேர்வு நடந்து வருகிறது. கடந்த 4ந்தேதி காலையிலும், மாலையிலும் 2 ஷிப்டுகளாக தேர்வு நடந்தது. தொழில்நுட்ப மற்றும் நிர்வாக குளறுபடிகளால் 17 மாநிலங்களில் சில மையங்களில் முதல் ஷிப்ட் தேர்வு 12-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. மாலையில் நடக்க இருந்த தேர்வு, மொத்தம் உள்ள 489 மையங்களிலும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் 2-வது நாளாக தொழில்நுட்ப குளறுபடியால் தேர்வு பாதிக்கப்பட்டது. ஆனால், காலையில் 95 சதவீத மையங்களில் தேர்வு சுமுகமாக நடந்ததாக தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது. எனினும், நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வானது 2வது நாளாக 50 மையங்களில் தள்ளி வைக்கப்பட்டது.
இதனால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்நிலையில், தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள செய்தியில், நிர்வாக கோளாறுகளால் தேர்வு ரத்து செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்காக, தேர்வானது வருகிற 24 முதல் 28 வரையிலான தேதிகளில் மீண்டும் நடத்தப்படுகிறது என தெரிவித்து உள்ளது.
இதற்காக தேர்வு எழுதுபவர்களுக்கு புதிய நுழைவு அட்டைகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது. ஆகஸ்டு 4 முதல் 6 வரையிலான நாட்களில் நடைபெற இருந்த 2வது கட்ட தேர்வு நிர்வாக மற்றும் தொழில்நுட்ப காரணங்களுக்காக சில மையங்களில் ஒத்தி வைக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து, அந்த தேர்வுகள் ஆகஸ்டு 12-14 ஆகிய நாட்களில் நடைபெறும் என முன்பு அறிவித்தோம். எனினும், தேர்வு எழுதுபவர்களில் பலர் எங்களை அணுகி, அந்த நாட்களில் தேர்வை நடத்த வேண்டாம் என்றும், தொடர்ச்சியாக பண்டிகை நாட்கள் வருகின்றன என்றும் தெரிவித்தனர்.
அதனால், அந்த தேர்வுகளை ஆகஸ்டு 24 முதல் 28 வரையிலான தேதிகளில் மீண்டும் நடத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. தேர்வு தேதிக்கு முன்பு அதற்கான புதிய நுழைவு அட்டைகள் வழங்கப்படும் என தேசிய தேர்வு முகமையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.