முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கர்நாடக ஐகோர்ட்டு நோட்டீஸ்
|எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரி தொடரப்பட்ட மனுவுக்கு விளக்கம் கேட்டு முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கர்நாடக ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பெங்களூரு:
கர்நாடக முதல்-மந்திரியாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தராமையா உள்ளார். அவர் மைசூரு மாவட்டம் வருணா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சித்தராமையா தேர்தலில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரி, மைசூருவை சேர்ந்த சங்கர் என்பவர் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அப்போது இலவசங்கள் வழங்குவதாக வாக்காளர்களிடம் ஆசைவார்த்தைகள் கூறி வாக்குகளை பெற்று சித்தராமையா வெற்றி பெற்றுள்ளார். இது தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகும். அதாவது இலவச திட்டங்கள் மூலம் வாக்காளர்களை அவர் விலைக்கு வாங்கி உள்ளார். இது சட்டப்படி குற்றமாகும். எனவே அவர் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என அறிவிக்க வேண்டும் என கூறி இருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த வாரம் நீதிபதி சுனித் தத் அமர்வில் நடைபெற்றது. அப்போது நீதிபதி, இருதரப்பு வாதங்களையும் கேட்டார்.
அப்போது முதல்-மந்திரி சித்தராமையாவின் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் பல்வேறு ஆட்சேபனைகள் உள்ளதாக கூறிய நீதிபதி, வழக்கு விசாரணையை 28-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வெற்றி செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கில் விளக்கம் அளிக்கும்படி முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அதன்படி முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.