மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து மத்திய நிதி ஆணையத்துக்கு நோட்டீஸ் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
|மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து மத்திய நிதி ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
இலவச திட்டங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளை கருத்தில்கொண்டு, மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை முறைப்படுத்துவது குறித்து ஆராய்ந்து பதில் அளிக்க மத்திய நிதி ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இலவச திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவிக்கும் தேர்தல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யக்கோரி அஸ்வினிகுமார் உபாத்யாயா சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்துவருகிறது.
அதன் விசாரணையில், 6.5 லட்சம் கோடி கடனில் இலங்கை மூழ்கியது போன்ற சூழ்நிலை நம் நாட்டில் ஏற்பட உள்ளது என மனுதாரர் அஸ்வினிகுமார் உபாத்யாயா வாதிட்டார்.
அப்போது வேறு ஒரு வழக்கில் ஆஜராக வந்திருந்த மூத்த வக்கீல் கபில் சிபலிடம் இதுதொடர்பாக தலைமை நீதிபதி யோசனை கேட்டார்.
அதற்கு கபில் சிபல், இது தீவிரமான விவகாரம். மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கும்போது, அவை எதிர்கொண்டுள்ள கடனை மத்திய நிதி ஆணையம் கருத்தில்கொள்ளலாம். இந்த விவகாரத்தில் நிதி ஆணையம் முடிவு எடுப்பது சரியாக இருக்கும் என்ற யோசனை தெரிவித்தார்.
இந்த யோசனை குறித்து மத்திய அரசிடம் ஆலோசனை பெற்று கருத்துகளை தெரிவிக்க கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்டு 3-ந் தேதிக்கு தள்ளிவைத்தது.
இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில்மனுவில், தேர்தலுக்கு முன்போ அல்லது பின்போ, இலவச திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவிப்பது கட்சிகளின் கொள்கை சார்ந்த விவகாரமாகும்.
மேலும் இதுபோன்ற இலவச திட்டங்கள் அந்தந்த மாநில நிதி ஆதாரத்தை பாதிக்குமா என்பதை வாக்காளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
இலவச திட்டங்கள் உள்ளிட்ட அரசின் கொள்கைகளையும், முடிவுகளையும் தேர்தல் ஆணையம் முறைப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளது.