< Back
தேசிய செய்திகள்
பெங்களூரு மாநகராட்சி உள்பட அரசு அலுவலகங்களுக்கு பெஸ்காம் நோட்டீஸ்
தேசிய செய்திகள்

பெங்களூரு மாநகராட்சி உள்பட அரசு அலுவலகங்களுக்கு 'பெஸ்காம்' நோட்டீஸ்

தினத்தந்தி
|
19 Nov 2022 12:15 AM IST

ரூ.236 கோடி மின் கட்டண பாக்கியை உடனடியாக செலுத்தும்படி பெங்களூரு மாநகராட்சி உள்பட அரசு அலுவலகங்களுக்கு பெஸ்காம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பெங்களூரு:

ரூ.236 கோடி மின் கட்டண பாக்கியை உடனடியாக செலுத்தும்படி பெங்களூரு மாநகராட்சி உள்பட அரசு அலுவலகங்களுக்கு பெஸ்காம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மின் கட்டண பாக்கி

பெங்களூரு மின்சார வினியோக நிறுவனம்(பெஸ்காம்) பெங்களூரு உள்பட 8 மாவட்டங்களில் மின்சாரத்தை வினியோகம் செய்து வருகிறது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெஸ்காமின் சிவாஜிநகர் மண்டல எல்லைக்கு உட்பட்ட பிள்ளன்ன கார்டன், பம்பு பஜார், காக்ஸ் டவுன், பானசவாடி மற்றும் நாகவரா துணை கோட்டங்களில் பெங்களூரு மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவை முறையே ரூ.27.54 கோடி, ரூ.90.20 கோடி என மொத்தம் ரூ.117.74 கோடி மின் கட்டண பாக்கி வைத்துள்ளது.

சிவாஜிநகர் செயற்பொறியாளர், இந்த மின் கட்டண பாக்கியை உடனடியாக செலுத்தும்படி கூறி பெங்களூரு மாநகராட்சி, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

வீட்டு வசதி அருங்காட்சியகம்

அதேபோல் கோரமங்களா மண்டலத்தில் ஆஸ்டின் டவுன், கோரமங்களா, முருகேஷ்பாளையா, மடிவாளா, எச்.ஏ.எல். துணை மண்டலத்தில் 10 வார்டுகளில் பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் ரூ.23.71 கோடி மின் கட்டணத்தை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளது. மல்லேசுவரம் மண்டலத்தில் பெங்களூரு மாநகராட்சி ரூ.16.70 கோடியும், குடிநீர் வடிகால் வாரியம் ரூ.13.60 கோடியும் பாக்கி வைத்துள்ளன.

இந்த மின் கட்டண பாக்கியை செலுத்தும்படி அவற்றின் அதிகாரிகளுக்கு மல்லேசுவரம் பெஸ்காம் என்ஜினீயர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்திரா நகர் மண்டலத்தில் பெங்களூரு மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம், கப்பன் பூங்கா, வீட்டு வசதி அருங்காட்சியகம், தோட்டக்கலை துறை, தபால் அலுவலகம், தேசிய விமானவியல் நிறுவனம், எல்.ஐ.சி., பி.எஸ்.என்.எல்., பெங்களூரு வளர்ச்சி ஆணையம், மெட்ரோ ரெயில் அலுவலகம், மத்திய ராணுவ ஆராய்ச்சி-வளர்ச்சி அமைப்பு, ஐகோர்ட்டு குடியிருப்பு பகுதி உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் ரூ.36.25 கோடி மின் கட்டண பாக்கி வைத்துள்ளன. அந்த அமைப்புகளுக்கு கட்டணத்தை செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நோட்டீஸ்

அதே போல் ஒயிட்பீல்டு மண்டலத்தில் மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் ரூ.5.81 கோடி மின் கட்டண பாக்கி வைத்து உள்ளது. அந்த அரசு அலுவலகங்களுக்கும் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று கூறி நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. ஆகமொத்தம் ரூ.236 கோடி மின் கட்டண பாக்கியை செலுத்தும்படி பெங்களூரு மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரியத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இவ்வாறு பெஸ்காம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்