< Back
தேசிய செய்திகள்
இலவசமாக எதையும் வழங்கக்கூடாது.. இன்போசிஸ் நாராயணமூர்த்தி பரபரப்பு பேச்சு
தேசிய செய்திகள்

இலவசமாக எதையும் வழங்கக்கூடாது.. இன்போசிஸ் நாராயணமூர்த்தி பரபரப்பு பேச்சு

தினத்தந்தி
|
1 Dec 2023 3:11 PM IST

அரசாங்கத்திடமிருந்து மானியம் பெறும் மக்கள், சமூகத்திற்கு எதாவது திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று இன்போசிஸ் நாராயணமூர்த்தி வலியுறுத்தினார்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது. இதில் இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி பங்கேற்று உரையாற்றினார். அப்போது நாட்டின் வளர்ச்சி, அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

குறிப்பாக அரசின் இலவச திட்டங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்த அவர், அரசாங்கத்திடமிருந்து மானியம் பெறும் மக்கள், அதற்கு பிரதிபலனாக சமூகத்திற்கு எதாவது திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் பேசியதாவது:-

அரசாங்கம் இலவச சேவைகள் மற்றும் மானியங்களை வழங்கும்போது, மக்கள் செய்யத் தயாராக இருக்கும் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். உதாரணமாக, இலவச மின்சாரம் தருவதாக அரசு சொன்னால், அரசு சொன்னது மிகவும் நல்ல விஷயமாக இருந்திருக்கும். ஆனால் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் வருகை சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், அதன்பிறகுதான் நாங்கள் அந்த இலவசத்தை தருவோம் என அரசு கூறலாம்.

இலவச சேவைகள் வழங்கப்படுவதை நான் எதிர்க்கவில்லை. நானும் ஏழ்மையான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவன்தான். ஆனால், இலவச மானியங்களைப் பெற்றவர்கள் தங்கள் சந்ததியினரின் எதிர்காலம் சிறப்பாக இருப்பதற்கு சற்று பெரிய பொறுப்பை ஏற்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க வேண்டும். அதைத்தான் சொல்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்