டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பதற்கு இது சரியான தருணம் அல்ல - நிர்மலா சீதாராமன்
|டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பதற்கான தருணம் இது அல்ல என்று மத்திய நிதி மந்திரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் முதன்முறையாக யுபிஐ சேவை வசதி, 2016ம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது. கார்டு பரிவர்த்தனைகளுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ பரிவர்த்தனை சேவை , இப்போது இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்துள்ளது.
இந்த வகை டிஜிட்ட்டல் பண பரிவர்த்தனைகளை பயன்படுத்த பயனருக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை. இதனால் யுபிஐ சேவையை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே, யுபிஐ சேவை விதியில் மாற்றத்தை கொண்டு வந்து யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வந்தது. ஒவ்வொரு யுபிஐ பண பரிவர்த்தைக்கும் கட்டணம் வசூலிப்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி பங்குதாரர்களிடம் கருத்து கோர உள்ளதாகவும் இது தொடர்பாக முன்மொழி எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், யுபிஐ பண பரிவர்த்தனை சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியது.
இந்நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் பொதுமக்கள் நலன் சார்ந்தது என நாங்கள் பார்க்கிறோம். டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மக்களுக்கு இலவசமாக கிடைக்க வேண்டும். அப்போது தான் இந்திய பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்குவது ஆர்வத்தை ஏற்படுத்தும். டிஜிட்டல் மயமாக்கள் மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்.
ஆகையால், டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பதற்கு இது சரியான தருணமல்ல என்று நாங்கள் நினைக்கிறோம். டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை நாம் மேலும் மேலும் ஊக்கப்படுத்துகிறோம்' என்றார்.