பாதுகாப்பு பிரிவின் ஆத்மநிர்பாரத் பயணத்தில் அடிக்கல் மட்டுமின்றி, மைல்கல்லும் கூட: மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சு
|குஜராத்தில் தனியார் விமான தயாரிப்பு நிறுவன அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், பாதுகாப்பு பிரிவின் ஆத்மநிர்பாரத் பயணத்தில், அடிக்கல் மட்டுமின்றி, மைல்கல்லும் கூட என பேசியுள்ளார்.
வதோதரா,
குஜராத்தின் வதோதரா நகரில் இந்திய விமான படைக்கான விமானங்களை தயாரித்து வழங்கும் திறன் கொண்ட தனியார் நிறுவனத்தின் தொடக்க விழா இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அதற்கான அடிக்கல்லை நாட்டியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசை வழங்கி கவுரவம் அளித்தனர். நிகழ்ச்சியில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கும் கலந்து கொண்டார்.
இதன்படி, சி-295 விமானங்களை டாடா-ஏர்பஸ் நிறுவனம் உற்பத்தி செய்ய உள்ளது என மத்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
40 விமானங்கள் தவிர்த்து, இந்த உற்பத்தி மையத்தில் விமான படைக்கு தேவையான மற்றும் ஏற்றுமதிக்கான கூடுதல் விமானங்களும் தயாரிக்கப்படும் என பாதுகாப்பு செயலர் அரமானே கிரிதர் இன்று கூறியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசும்போது, நாட்டில் தனியார் அமைப்பு ஒன்று முதல் முறையாக, விமானம் தயாரிப்புக்கான நிறுவனத்தின் அடிக்கல்லை நாட்டுகிறது.
பாதுகாப்பு துறை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நிச்சயம் இது பெருமை சேர்க்கும் விசயம். பாதுகாப்பு பிரிவின் ஆத்மநிர்பாரத் பயணத்தில், இது வெறும் அடிக்கல் மட்டுமில்லை. மைல்கல்லும் கூட.
இந்த நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் சி-295 விமானம் உயரிய திறன்களுடன் மற்றும் சர்வதேச தரத்துடன் இருக்கும். இந்திய விமான படையின் தளவாட திறனை மேம்படுத்தும் வகையில் அது முக்கியத்துவம் பெற்றிருக்கும் என அவர் கூறியுள்ளார்.
இதுவரை அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், உக்ரைன், பிரேசில், சீனா மற்றும் ஜப்பான் ஆகிய குறிப்பிட்ட நாடுகளே ராணுவ போக்குவரத்து விமானங்களை உற்பத்தி செய்யும் திறன் படைத்த நாடுகளாக உள்ளன.
அந்த வகையில் சி-295 ரக விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன. இதனை நாட்டின் முதல் தனியார் விமான உற்பத்தி நிறுவனம் தயாரிப்பதுடன், இந்தியாவும் அந்த நாடுகளின் வரிசையில் இடம் பெற்று உள்ளது.