< Back
தேசிய செய்திகள்
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணித்த செயல் மலிவான அரசியல் - மத்திய சட்ட மந்திரி கண்டனம்
தேசிய செய்திகள்

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணித்த செயல் மலிவான அரசியல் - மத்திய சட்ட மந்திரி கண்டனம்

தினத்தந்தி
|
29 May 2023 5:13 AM IST

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணித்தது, மலிவான அரசியலுக்கு உதாரணம் என்று மத்திய சட்ட மந்திரி கூறினார்.

புதுடெல்லி,

மத்திய சட்ட மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்குமாறு அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தோம். மூத்த தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தனர். இருப்பினும், பல்வேறு எதிர்க்கட்சிகள் புறக்கணித்து விட்டன. இது மலிவான அரசியலுக்கு உதாரணம்.

அவர்களின் புறக்கணிப்பை ஆதரிக்காமல், சில எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், அரசியல் சட்ட பதவி வகிப்பவர்கள் ஆகியோரும் பங்கேற்றனர்.

எங்கே உட்காருவது?

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், மீராகுமார் சபாநாயகராக இருந்தபோது, புதிய நாடாளுமன்றம் கட்டுவது பற்றி விவாதம் நடந்தது. பின்னர், அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்கும்போது முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று அந்த யோசனை நிராகரிக்கப்பட்டது.

இப்போது, தொகுதி மறுவரையறை பணி நெருங்கி விட்டது. எம்.பி.க்கள் எண்ணிக்கை உயரும். அவர்கள் எங்கே உட்காருவார்கள்?

நேரில் பார்த்தால் பாராட்டுவார்கள்

விழாவை புறக்கணித்தவர்கள் கூட புதிய நாடாளுமன்றத்தை பார்க்கும்போது பாராட்டுவார்கள். அரசியல் நிர்பந்தத்துக்காக அதை வெளிப்படையாக சொல்வதை அவர்கள் தவிர்க்கக்கூடும்.

அரசியல் நிர்பந்தத்துக்காக ராகுல்காந்தி அறிக்கை வெளியிட்டு வருகிறார். செங்கோல் பற்றி காங்கிரஸ் சர்ச்சை எழுப்புவதும் தேவையற்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்