< Back
தேசிய செய்திகள்
சக்தியை போல் அல்ல... இயேசுவே உண்மையான கடவுள்:  ராகுல் காந்தியை சந்தித்த பாதிரியார் சர்ச்சை பேச்சு
தேசிய செய்திகள்

சக்தியை போல் அல்ல... இயேசுவே உண்மையான கடவுள்: ராகுல் காந்தியை சந்தித்த பாதிரியார் சர்ச்சை பேச்சு

தினத்தந்தி
|
10 Sept 2022 1:45 PM IST

சக்தியை போல் இல்லாமல் இயேசுவே உண்மையான கடவுள் என ராகுல் காந்தியுடனான சந்திப்பில் தமிழக பாதிரியார் பேசும் சர்ச்சை பேச்சு வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி,



காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ''பாரத் ஜோடோ யாத்ரா'' என்ற பெயரிலான இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இதனையடுத்து தேசிய கொடியை கையில் ஏந்தியவாறு சுமார் 700 மீட்டர் தூரம் நடந்து வந்த ராகுல்காந்தி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

நேற்றுடன் 3-வது நாள் பாதயாத்திரை நிறைவு பெற்றது. இன்று 4-வது நாளாக அவர் தனது பாதயாத்திரையை தொடர்ந்து உள்ளார். அவர் தனது பயணத்தின் இடையே பல்வேறு நபர்களையும் சந்தித்து பேசி வருகிறார்.

இந்நிலையில், தமிழக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா என்பவரை ராகுல் காந்தி சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு பற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில், இயேசு கிறிஸ்து கடவுளின் ஒரு வடிவம்? அது சரியா? என அவரிம் ராகுல் காந்தி கேட்கிறார். அதற்கு ஜார்ஜ் பொன்னையா பதிலளிக்கும்போது, அவரே உண்மையான கடவுள் என கூறுகிறார்.

தொடர்ந்து அவர், கடவுள் தன்னை ஆணாக வெளிப்படுத்தி இருக்கிறார். உண்மையான ஒரு மனிதராக... சக்தியை போன்று அல்ல... அதனால், நாம் ஒரு மனிதரை பார்க்கிறோம் என கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் தூண்டி விடும் வகையிலான அறிக்கைகளை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய அனுபவம் பொன்னையாவுக்கு உள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில், மதுரையின் கள்ளிக்குடி பகுதியில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, தி.மு.க. மந்திரி மற்றும் பிறருக்கு எதிராக வெறுப்புணர்வு பேச்சுக்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்து சமூகத்தினரை இலக்காக கொண்டும் அவர் வெறுப்புணர்வுடன் பேசியதற்காக அவர் மீது கடந்த ஆண்டு ஜூலை 18-ந்தேதி கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொன்னையாவை புலியூர்குறிச்சியில் உள்ள முட்டிடிச்சான் பாறை கிறிஸ்தவ ஆலயத்தில் வைத்து ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.

இதுபற்றி பா.ஜ.க.வின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஷாத் பூனாவல்லா கூறும்போது, ராகுல் காந்தியை, சக்தியை (மற்றும் பிற இந்து கடவுள்களை) போல் அல்லாமல் இயேசுவே ஒரே கடவுள் என கூறிய ஜார்ஜ் பொன்னையா சந்தித்து பேசியுள்ளார்.

இதற்கு முன்பு, பாரத மாதாவின் அசுத்தங்களால் நான் கெட்டு போய் விட கூடாது என்பதற்காகவே நான் காலணிகளை (ஷூக்கள்) அணிகிறேன் என்று சர்ச்சையாக பேசியதற்காக கைது செய்யப்பட்டவர் பொன்னையா என்றும் பூனாவல்லா கூறியுள்ளார். இதனால், சர்ச்சைக்குரிய பாரத தொல்லையில் ஈடுபடும் நபர்களுடன் சேர்ந்து பாரத ஒற்றுமை யாத்திரை நடத்தப்படுகிறது. இது ஜோடோ யாத்திரை அல்ல தோடோ யாத்திரை என கூறிய அவர், காங்கிரஸ் கட்சியானது இந்து விரோத போக்கை கொண்ட நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது என்றும் பூனாவல்லா தெரிவித்து உள்ளார்.


மேலும் செய்திகள்