நீதிபதிகள் அல்ல, நடைமுறையில் தான் தவறு உள்ளது: மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ
|நாடு முழுவதும் 4.90 கோடி வழக்குகள் தேங்கிக்கிடக்கிற நிலையில், அவற்றைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
உதய்பூர்,
நாடு முழுவதும் 4.90 கோடி வழக்குகள் தேங்கிக்கிடக்கிற நிலையில், அவற்றைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் 'இந்தியாவில் நிலையான வளர்ச்சி: பரிணாமம் மற்றும் சட்ட முன்னோக்கு' என்ற தலைப்பில் நேற்று ஒரு மாநாடு நடந்தது. இதில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நமது நாட்டில் உள்ள கோர்ட்டுகளில் 4 கோடியே 90 லட்சம் வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. நாட்டில், சமூகத்தில் இவ்வளவு வழக்குகள் நிலுவையில் இருப்பது நல்லதல்ல. வழக்குகள் தேங்கிக்கிடப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. நீதிபதிகளின் நிலையும் மோசமாகத்தான் இருக்கிறது. ஒரு நீதிபதி ஒரு நாளில் 50 அல்லது 60 வழக்குகளை கையாள்கிறார். பல வழக்குகளுக்கு அவர்கள் தீர்வு காண்கிறார்கள். ஆனால் எவ்வளவு வழக்குகளை முடிக்கிறார்களோ, அதற்கு இரு மடங்காக புதிய வழக்குகள் வருகின்றன. ஏன் இவ்வளவு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று சாமானிய மக்கள் கேட்கிறார்கள். ஒரு நீதிபதி எந்த அளவுக்கு பணியாற்ற முடியும் என்பது அவர்களுக்குத் தெரியாது. இது நீதிபதியின் தவறு அல்ல. அமைப்பு முறையின் தவறு. தேங்கிக்கிடக்கும் வழக்குகளை குறைப்பதில் தொழில்நுட்பம் மிகப்பெரிய தீர்வாக அமையும்.
காகிதமற்ற கோர்ட்டுகளாக மாற்றுவதற்காக எல்லா கோர்டடுகளிலும் தொழில்நுட்பங்கள் புகுத்தப்படுகின்றன. எல்லாம் டிஜிட்டல் மயமாகும். இதில் பாதி வழிக்கு வந்து விட்டோம். இதில் இறுதிவடிவத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். ஐகோர்ட்டுகள், கீழ் கோர்ட்டுகள், தீர்ப்பாயங்களில் தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் விசாரணைகள் காணொலிக்காட்சி வழியாக நடைபெற்றதில் கண்ட வெற்றிதான் இதற்கு காரணம்.பல ஐகோர்ட்டுகளில் காணொலிக்காட்சி முறையில் விசாரணை சிறப்பாக நடைபெறுகிறது. தேங்கிக்கிடக்கும் வழக்குகளை குறைப்பதற்கு பல வழிகள் இருக்கின்றன. அதில் தொழில்நுட்பத்துக்கு முக்கிய பங்கு உண்டு. இதில் எங்கள் அமைச்சகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இனி வரும் நாட்களிலும் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.