ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம்: மேலைநாடுகளின் எதிர்ப்பை இந்தியா நிராகரித்தது
|ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில், மேலை நாடுகளின் எதிர்ப்பை இந்தியா நிராகரித்துள்ளது.
புதுடெல்லி,
உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர், 3 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இதன் காரணமாக, அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள், ரஷியா மீது பொருளாதார தடை விதித்துள்ளன.
ரஷியாவுடன் எந்த நாடும் வர்த்தக தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்று வற்புறுத்தி வருகின்றன.
ஆனால், ரஷியாவிடம் தள்ளுபடி விலையில் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதற்கு அமெரிக்காவும், இதர மேலை நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம், மேலைநாட்டு தலைவர்கள் பலர் அடுத்தடுத்து இந்தியாவுக்கு வந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்தநிலையில், மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சியிடம் இதுகுறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-
நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு தேவையை கருத்தில்கொண்டு எங்கள் அணுகுமுறை அமைகிறது. பல்வேறு பிராந்தியங்களும், நாடுகளும் கூட இதே கண்ணோட்டத்தில் கொள்கை முடிவு எடுத்திருப்பதை சமீபத்தில் நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.
எனவே, இது இந்தியா மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிடம் வாங்கும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு, இந்தியா வாங்குவதை விட அதிகம் என்று அவர் கூறினார்.