வாழைப்பழங்களை தராததால் ஏமாற்றம்: பாகனை மிதித்து கொன்ற யானை
|மத்திய பிரதேசத்தில், தனக்கு வழங்கப்பட்ட வாழைப்பழங்களை எடுத்து வைத்துக்கொண்ட பாகனை யானை மிதித்து கொன்றது
போபால்,
மத்தியப் பிரதேசத்தில் வாழைப்பழத்தை தராமல் ஏமாற்றிய பாகனை யானை ஒன்று தூக்கிப்போட்டு மிதித்து கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் செயோனி மாவட்டத்தில் இருந்து 20 கி.மீ தொலைவிலுள்ள ரகிவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் பரத் வாசுதேவ்.
இவர் ஹீரா என்ற பெண் யானையை வைத்து பிழைப்பு நடத்திவந்தார். அதுபோல் ஒரு ஊருக்குச் செல்லும் வழியில், வாழைப்பழங்களை ஏற்றிவந்த லாரி ஓட்டுநர் ஒருவர் யானைக்கு கொடுக்கச்சொல்லி சில சீப்பு வாழைப்பழங்களை கொடுத்துச் சென்றுள்ளார். ஆனால் பரத் அதை யானைக்குக் கொடுக்காமல் தனது பைக்குள் வைத்துள்ளார்.
இதனைப் பார்த்து கோபமடைந்த யானை, பரத்தை தனது தும்பிக்கையால் தூக்கி சாலையில் அடித்து, காலால் மிதித்து கொன்றுபோட்டது. இதனை பரத்துடன் சென்ற உதவியாளர் ஒருவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் பரத்தை மருத்துவனைக்கு கொண்டுசென்றதாகவும், ஆனால் அதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதற்கு முன்பு யானை இதுபோன்று நடந்து கொண்டதேயில்லை என்று உடனிருந்தவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.