< Back
உலக செய்திகள்
புதினுடன் கிம் ஜாங் அன் சந்திப்பு: போருக்கு முழு ஆதரவு
உலக செய்திகள்

புதினுடன் கிம் ஜாங் அன் சந்திப்பு: போருக்கு முழு ஆதரவு

தினத்தந்தி
|
14 Sept 2023 4:28 AM IST

குண்டு துளைக்காத ரெயிலில் ரஷியா சென்ற வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் அந்த நாட்டின் அதிபர் புதினை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மாஸ்கோ,

வடகொரியாவின் அணு ஆயுத நடவடிக்கைகளின் காரணமாக சர்வதேச நாடுகளால் அந்த நாடு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.

இதனால் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் வடகொரியா கடுமையான மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. அதே வேளையில் ரஷியாவுடன் வடகொரியா நெருங்கிய நட்பு பாராட்டி வருகிறது.

இந்த சூழலில் ரஷிய அதிபர் புதின் விடுத்த அழைப்பின் பேரில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், நேற்று முன்தினம் ரஷியாவுக்கு புறப்பட்டு சென்றார். கிம் தன்னுடைய குண்டு துளைக்காத கவச ரெயிலில் வடகொரிய எல்லையை கடந்து ரஷியா சென்றடைந்தார்.

செயற்கைக்கோள் ஏவுதளம்

இந்த நிலையில் ரஷியாவின் கிழக்கு அமுர் பிராந்தியத்தில் இருக்கும் பிளாகோவெஷ்சென்ஸ்க் நகரில் இருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வோஸ்டோச்னி காஸ்மோடிரோம் என்கிற செயற்கைக்கோள் ஏவுதளத்தில் ரஷிய அதிபர் புதினை கிம் ஜாங் அன் நேற்று சந்தித்தார்.

ரஷியாவின் மிக முக்கியமான உள்நாட்டு செயற்கைக்கோள் ஏவுதளமாக கருதப்படும் வோஸ்டோச்னி காஸ்மோடிரோம் ஏவுதளத்துக்கு வந்த கிம்மை புதின் உற்சாகமாக வரவேற்றார். தொடர்ந்து கிம்மை ஏவுதளத்துக்குள் அழைத்து சென்ற புதின், அங்கு நடக்கும் அனைத்து செயல்பாடுகளையும் கிம்முக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

கிம்-புதின் பேச்சுவார்த்தை

அதன்பிறகு இரு நாட்டு தூதரக அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும், கிம்-புதின் இடையேயான தனிப்பட்ட பேச்சுவார்த்தையும் நடந்தது. இரு நாட்டு தலைவர்களும் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உக்ரைன் மீதான போரில் பயன்படுத்துவதற்கு வடகொரியாவிடம் இருக்கும் சோவியத் கால பீரங்கி மற்றும் ராக்கெட் குண்டுகளை பெற ரஷியா விரும்பும் நிலையில் இரு நாட்டு தலைவர்கள் இடையே நடந்த இந்த பேச்சுவார்த்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது.

போருக்கு முழு ஆதரவு

தனிப்பட்ட சந்திப்பிற்கு முன்னதாக ரஷிய-உக்ரைன் போரை மறைமுகமாக குறிப்பிடும் விதமாக, "ரஷியா தனது பாதுகாப்புக்காக மேற்கொண்டு வரும் புனித போரில், அந்நாட்டிற்கு தேவைப்படும் முழுமையான, நிபந்தனையற்ற ஆதரவை வடகொரியா வழங்கும்" என கிம் தெரிவித்தார்.

இதன் மூலம் உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆயுதங்களை வழங்க வடகொரியா தயாராக இருப்பதை கிம் சூசகமாக தெரிவித்தாக கருதப்படுகிறது.

வடகொரியாவுக்கு உதவி

அதேபோல் வடகொரியா ராணுவம் மற்றும் உளவு செயற்கைகோள்களை தயாரிப்பதற்கு ரஷியாவின் உதவியை நாடி வரும் நிலையில் ரஷியாவின் முக்கியமான செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இரு நாட்டின் தலைவர்களின் சந்திப்பு நடந்தது, வடகொரியாவுக்கு ரஷியாவின் உதவி கிடைப்பதற்கான சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது.

உக்ரைன் போர் காரணமாக ரஷியாவை சர்வதேச அளவில் தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இறங்கியுள்ள நிலையில், புதின்-கிம் இடையிலான இந்த சந்திப்பு உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

வடகொரியா ஏவுகணை சோதனை

ஐ.நா. பாதுகாப்பு சபை விதித்துள்ள பொருளாதார தடைகளை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளை புறந்தள்ளியும் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த சூழலில் ரஷியா சென்றுள்ள வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் நேற்று அந்த நாட்டின் அதிபர் புதினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் வடகொரியா அடுத்தடுத்து 2 ஏவுகணைகளை ஏவி சோதித்தது. தலைநகர் பியாங்யாங்கில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து 10 நிமிட இடைவெளியில் 2 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை ஏவியதாகவும், அவை கிழக்கு கடற்கரை நோக்கி பயணித்து, கடலில் விழுந்ததாகவும் தென்கொரியா கூட்டுப்படைகளின் தலைவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்