அரியானாவில் அணுமின் நிலையம் - மத்திய அணுசக்தித்துறை இணை மந்திரி
|டெல்லிக்கு வடக்கே அரியானாவில் உள்ள கோரக்பூரில் அமைக்கப்படுவதாக மத்திய அணுசக்தித்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
இந்தியாவின் வடபகுதியில் முதல் அணுமின் நிலையம், தேசிய தலைநகர் டெல்லிக்கு வடக்கே சுமார் 150 கி.மீ. தொலைவில் அரியானாவில் உள்ள கோரக்பூரில் அமைக்கப்படுவதாக மத்திய அணுசக்தித்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இதற்கு முன் தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம் மற்றும் மேற்கு பகுதியான மராட்டியம், ராஜஸ்தான் போன்ற இடங்களில் மட்டுமே அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்தியாவின் அணுசக்தித்திறனை அதிகரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், கடந்த 8 ஆண்டுகளில் 10 அணு உலைகளை நிறுவுவதற்கு ஒரே நேரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று ஜிதேந்திர சிங் கூறினார்.
கோரக்பூரில் தலா 700 மெகாவாட் திறன் கொண்ட 2 உலைகள் முற்றிலும் உள்நாட்டு வடிவமைப்புடன் கூடிய அழுத்தப்பட்ட கனநீர் உலையுடன் அமைக்கப்படுவதாக தெரிவித்த அவர், அதற்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதியான ரூ.20,594 கோடியில் இதுவரை ரூ.4,906 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றும் கூறினார். மேலும், அரியானா நீர்ப்பாசனம் மற்றும் நீர்வளத்துறை மூலம், குளிரூட்டுதலுக்கான நீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நீர் குழாயின் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இந்த பணிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.