< Back
தேசிய செய்திகள்
வடஇந்தியாவில் கடுங்குளிர் சூழலில் அடுத்த 2 நாள் மழை பெய்யும்:  இந்திய வானிலை ஆய்வு மையம்
தேசிய செய்திகள்

வடஇந்தியாவில் கடுங்குளிர் சூழலில் அடுத்த 2 நாள் மழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

தினத்தந்தி
|
28 Jan 2023 10:18 AM IST

வடஇந்தியாவில் கடுங்குளிர் நிலவும் சூழலில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


புதுடெல்லி,


இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், வடமேற்கு இந்தியாவில், பஞ்சாப், அரியானா, சண்டிகர் மற்றும் மேற்கு உத்தர பிரதேசம், கிழக்கு உத்தர பிரதேசம் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மித அளவிலான பரவலாக மழை பெய்ய கூடும் என தெரிவித்து உள்ளது.

இதன்படி, நாளை மற்றும் நாளை மறுதினம் இரண்டு நாட்களுக்கு இந்த சூழல் காணப்படும். இதேபோன்று, ராஜஸ்தானில் இன்றும், நாளையும் லேசானது முதல் மித அளவிலான பரவலாக மழை பெய்ய கூடும் என தெரிவித்து உள்ளது.

கடந்த சில வாரங்களாக கடுங்குளிர் நிலவி வந்த சூழலில், மேற்கு நோக்கி வீச கூடிய காற்றால் குறைந்தபட்ச வெப்பநிலையானது, இன்று 3 டிகிரி செல்சியசில் இருந்து 5 டிகிரி செல்சியசாக அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில் நாளை லேசான மழை பெய்ய கூடும். மேற்கு இமயமலை பகுதியில் ஒரு சில இடங்களில் நாளையும், நாளை மறுநாளும் கனமழை அல்லது பனிப்பொழிவு இருக்க கூடும்.

வடமேற்கு இந்தியாவில் நாளையும், நாளை மறுநாளும் மணிக்கு 20 முதல் 30 கி.மீ. வரையிலான வேகத்துடன் கடுமையான காற்று வீசும். ராஜஸ்தானில் ஒரு சில இடங்களில் இன்று தரை பகுதியில் பனிபடர்ந்து காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்