பிரதமர் மோடி தலைமையின் கீழ் வளர்ச்சி பாதையில் வடகிழக்கு மாநிலங்கள்... அமித்ஷா பேச்சு
|பிரதமர் மோடி தலைமையின் கீழ் வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி பாதையில் முன்னோக்கி செல்கின்றன என மத்திய மந்திரி அமித்ஷா பேசியுள்ளார்.
ஷில்லாங்,
பிரதமர் மோடி மேகாலயாவுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மாநில தலைநகர் ஷில்லாங்கில் இன்று காலை நடைபெற்ற வடகிழக்கு கவுன்சில் பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றார். இதில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, 8 வடகிழக்கு மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மற்றும் கவர்னர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்து பேசினார். அவர் ஷில்லாங்கில் பேசும்போது, கடந்த 8 ஆண்டுகளில் வடகிழக்கில் அமைதியின்மை, ஊழலுக்கு சிவப்பு அட்டை காட்டி இருக்கிறோம் என பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து மத்திய மந்திரி அமித்ஷா பேசும்போது, பிரதமர் மோடி தலைமையின் கீழ் வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி பாதையில் தொடர்ந்து முன்னேறி செல்கின்றன. வடகிழக்கில் அமைதி பரவி காணப்படுகிறது என பேசியுள்ளார்.
ஆயுத படை சிறப்பு அதிகாரங்களுக்கான சட்டம் திரும்ப பெறப்பட வேண்டும் என முன்பு அதிகளவில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், தற்போது அதுபோன்று யாரும் கோரிக்கை வைக்க அவசியமில்லை.
அரசே அந்த சட்டம் திரும்ப பெறப்படுவதற்கான தொடக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என கூறியுள்ளார். இதன்படி, அசாமில் 60 சதவீதம் வரை இச்சட்டத்தில் இருந்து விடுபட்டு உள்ளது. மணிப்பூரில் 6 மாவட்டங்களில் 15 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியும் சட்டத்தில் இருந்து விடுபட்டு உள்ளது.
அருணாசல பிரதேசத்தில் ஒரே ஒரு மாவட்டம் மட்டும் இந்த சட்டத்தின் கீழ் உள்ளது. நாகலாந்தில் 7 மாவட்டங்களில் இந்த சட்டம் நீக்கப்பட்டு விட்டது. திரிபுரா மற்றும் மேகாலயாவில் முற்றிலும் இந்த சட்டம் நீக்கப்பட்டு உள்ளது என்று அவர் பேசியுள்ளார்.