'பா.ஜ.க.வின் செயல்பாடுகள் எதுவும் ராமருக்கு நெருக்கமானது இல்லை' - கபில் சிபல்
|ராமர் தனது இதயத்தில் இருந்து தன்னை வழிநடத்துகிறார் என கபில் சிபல் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் குடமுழுக்கு விழா வரும் ஜனவரி 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விழாவில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் மத்திய மந்திரியும், மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் அவர் பங்கேற்பாரா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-
"ராமர் என் இதயத்தில் இருக்கிறார். அதை வெளிக்காட்ட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ராமர் எனது இதயத்தில் இருந்து என்னை வழிநடத்துகிறார் என்றால், நான் சரியான வழியில் செல்கிறேன் என்று பொருள். வேறு எதைப் பற்றியும் நான் கவலைப்பட மாட்டேன்.
ராமர் கோவில் விவகாரம் என்பது வெறும் விளம்பரமாகும். பா.ஜ.க.வின் செயல்பாடுகள் எதுவும் ராமருக்கு நெருக்கமானது இல்லை. உண்மை, சகிப்புத்தன்மை, தியாகம், பிறருக்கு மதிப்பளித்தல் ஆகியவை ராமரின் சில குணங்களாகும். ஆனால் பா.ஜ.க.வினர் இதற்கு நேரெதிராக செயல்பட்டு வருகின்றனர். தற்போது ராமருக்கு கோவில் கட்டுவதன் மூலம் அவரை மகிமைப்படுத்துவதாக பா.ஜ.க.வினர் கூறிக்கொள்கின்றனர்."
இவ்வாறு கபில் சிபல் தெரிவித்தார்.