நட்சத்திர ஓட்டலில் ஓய்வெடுக்கும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மராட்டியத்தில் எந்த வேலையும் இல்லை - சஞ்சய் ராவத்
|சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு, ஜூலை 11 வரை அவர்கள் கவுகாத்தியில் ஓய்வெடுக்க அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மராட்டியத்தில் எவ்வித வேலையும் இல்லை.
மும்பை,
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அசாமில் முகாமிட்டுள்ளனர். ஏக்னாத் ஷிண்டே தலைமையில் முகாமிட்டு இருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் அடுத்த கட்ட நகர்வு மராட்டிய அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சிவசேனா சார்பில் துணை சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. சபாநாயகரின் நோட்டீசை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அதிருப்தி எம்.எல்.ஏக்களை ஜூலை 11 ஆம் தேதி வரை தகுதி நீக்கம் செய்யக்கூடாது எனவும் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் இன்று கூறுகையில், "சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு, ஜூலை 11 வரை அவர்கள் கவுகாத்தியில் ஓய்வெடுக்க அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மராட்டியத்தில் எவ்வித வேலையும் இல்லை.
இன்னும் சில எம்எல்ஏக்கள் எங்களுடன் தொடர்பில் இருப்பதால், அவர்களை நாங்கள் அதிருப்தியாளர்களாக கருதவில்லை. அவர்களது குடும்பத்தினரும் எங்களுடன் தொடர்பில் உள்ளனர், அவர்கள் எங்களிடம் திரும்பி வருவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
மகாவிகாஸ் அகாடி அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் பாஜகவும் அதன் தலைவர் தேவேந்திர பட்னாவிசும் தலையிடக் கூடாது. அவ்வாறு செய்தால், அவர்களது கட்சி (பாஜக), பட்னாவிஸ் மற்றும் பிரதமர் மோடியின் பெயர்கள் களங்கமாகிவிடும்."
இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே பணமோசடி வழ்க்கில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.