< Back
தேசிய செய்திகள்
கர்நாடகாவில் தண்ணீரே இல்லை..மேகதாதுதான் ஒரே தீர்வு: டிகே சிவக்குமார்
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் தண்ணீரே இல்லை..மேகதாதுதான் ஒரே தீர்வு: டிகே சிவக்குமார்

தினத்தந்தி
|
31 Aug 2023 4:49 PM IST

கர்நாடகா துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் அவசரமாக டெல்லி சென்று சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரு,

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை அடுத்த 15 நாட்களுக்கு திறந்துவிடவேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் நேற்று முன் தினம் உத்தரவிட்டு இருந்தது. இதன்படி தற்போது தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கர்நாடகா நீர்வளத்துறை மந்திரியும், துணை முதல் மந்திரியுமான டி.கே.சிவக்குமார் அவசரமாக டெல்லி சென்று சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது;

"தமிழகத்திற்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிட்டிருப்பது கர்நாடகாவுக்கு மிகப்பெரிய தலைவலி. கர்நாடகாவில் தற்போது உள்ள சூழ்நிலையில் கபினி, கே.ஆர்.எஸ். ஆகிய அணைகளில் இருந்து தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட்டால் இனிவரும் காலங்களில் குடிநீருக்கு பஞ்சம் ஏற்படும் சூழல் இருவாகும். இது எங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

மேகதாது அணை இருந்திருந்தால், இதுபோன்ற பிரச்சனை வந்திருக்காது. அதற்காக தான் நாங்கள் மேகதாது அணை வேண்டும் என்கிறோம். தற்போதுள்ள சூழலில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டால், அது கர்நாடக விவசாயிகளையும் பாதிக்கும். தமிழக விவசாயிகளின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கிறோம்." இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்துக்கு 5 ஆயிரம் கன அடி நீரை வழங்குவதை தடுக்கவேண்டும் என்ற நோக்கில் டி.கே.சிவக்குமார் சட்டவல்லுநர்கள் சந்திப்பை நடத்தியுள்ளார். இது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தில் வலியுறுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மை நிலையை விளக்கி கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிடுவதை தடுக்கும் நோக்கில் அவர் இவ்வாறு செயல்பட்டு வருகிறார்.

மேலும் செய்திகள்