ஜனாதிபதி உரையில் தொலைநோக்கு சிந்தனையோ, வழிகாட்டுதலோ இல்லை - கார்கே குற்றச்சாட்டு
|ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை மீதான விவாதத்தில் மாநிலங்களவையில் காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.
புதுடெல்லி,
ஜனாதிபதி திரவுபதி முர்மு உரைக்கு, நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது மாநிலங்களவையில், மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
ஜனாதிபதியின் உரை என்பது மிகவும் முக்கியமானது. ஜனாதிபதி திரவுபதி முர்முவை மதிக்கிறோம். இந்த ஆண்டு, நாடாளுமன்றத்தில் இரண்டு முறை ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். முதல் முறை ஆற்றிய உரை தேர்தலுக்கானது.
ஜனாதிபதி உரையில், ஏழைகள், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சாதகமாக எந்த திட்டமும் உரையில் எதுவும் இடம் பெறவில்லை. ஜனாதிபதியின் உரையில் தொலைநோக்கு தொலைநோக்கு சிந்தனையோ, வழிகாட்டுதலோ இல்லை. கடந்த முறை போலவே, இந்த முறையும் மத்திய அரசை பாராட்டும் வார்த்தைகள் ஜனாதிபதி உரையில் அதிகம் இருந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து அகற்றப்பட்ட காந்தி, அம்பேத்கர் சிலைகளை மீண்டும் பழைய இடத்தில் நிறுவ வேண்டும். இது போன்ற விவகாரங்களில் முடிவு எடுக்கும் முன், எதிர்க்கட்சித் தலைவரை உள்ளடக்கிய கமிட்டியிடம் ஆலோசிக்க வேண்டும். ஆனால் அரசு ஆலோசனை நடத்தாமல் முடிவெடுத்துள்ளது என்றார்.