சோனியா காந்தி குடும்பத்தின் ஆலோசனை பெறுவதில் அவமானம் இல்லை: மல்லிகார்ஜுன கார்கே பேட்டி
|சோனியா காந்தி குடும்பத்தின் ஆலோசனை பெறுவதில் அவமானம் இல்லை என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
பெங்களூரு,
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. அந்த பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். இந்த நிலையில் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ராகுல் காந்தியும் தலைவராக இருந்துள்ளார். கட்சியின் வளர்ச்சிக்காக அவர்கள் தங்களின் பலத்தை வெளிப்படுத்தி போராடினர். நான் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டால் சோனியா காந்தியின் ரிமோட் கன்ட்ரோல் மூலம் பணியாற்றுவேன் என்று பா.ஜனதாவினர் விமா்சனம் செய்கிறார்கள்.
நேரு முதல் இந்திரா காந்தி, சோனியா காந்தி வரை அவர்களது குடும்பம் நாட்டிற்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளன. சில தேர்தல்களில் கட்சி தோல்வி அடைந்தது என்பதற்காக சோனியா காந்தி குடும்பத்திற்கு எதிராக விமர்சிப்பதை ஏற்க முடியாது. அது சரியல்ல. அவர்கள் நாட்டின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தினர்.
அவர்களின் அறிவுரை கட்சிக்கு தேவை. அதனால் அவர்களின் அறிவுரை மற்றும் ஒத்துழைப்பை நிச்சயம் கேட்பேன். இதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை. உங்களின் (பத்திரிகையாளர்கள்) அறிவுரை பயனுள்ளதாக இருந்தால் அதையும் ஏற்பேன். சோனியா காந்தியின் குடும்பம் கட்சிக்காக உழைத்துள்ளது. அவர்களின் ஆலோசனையை பெறுவது எனது கடமை. அதனால் அவர்களின் அறிவுரையை பெறுவேன்.
நாட்டில் மூலை மூடுக்கெல்லாம் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு தெரியும். யார் எங்கு உள்ளனர், யார் கட்சிக்காக என்ன செய்ய முடியும் என்பது அவர்களுக்கு தெரியும். கட்சியின் ஒற்றுமைக்காக என்ன செய்ய வேண்டுமோ அதுகுறித்து சோனியா காந்தி குடும்பத்திடம் இருந்து கற்க வேண்டும். அதை நான் செய்வேன். எனக்கு எதிராக சசிதரூர் போட்டியில் உள்ளார். அவர் தனது கருத்துகளை கூற உரிமை உண்டு.
நான் கட்சியின் ஆதரவு கேட்கும்போது, கட்சியில் அடிமட்டத்தில் இருந்து வளர்ந்து வந்தது குறித்து எடுத்து கூறுகிறேன். எந்த சர்ச்சையில் சிக்க நான் விரும்பவில்லை. அவர் அவரது கருத்துகளை கூறுகிறார். அவரது கருத்துகள் குறித்து விவாதிக்க விரும்பவில்லை. நான் எனது கருத்துகளை பகிர்ந்து கொள்கிறேன். இது எங்கள் கட்சி. எங்கள் குடும்ப விவகாரம்.
அவர் என்ன விரும்புகிறாரோ அதை கூறுகிறார். அதே போல் நான் சொல்ல விரும்புகிறேனோ அதை நான் சொல்கிறேன். இது உள்கட்சி தோழமை உணர்வுடன் நடைபெறும் போட்டி. வாக்காளர்களை நான் தொடர்பு கொண்டு பேகிகிறேன். எனது பிரதிநிதிகள் தேர்தல் பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்தேன். அதில் பங்கேற்று வாக்கு சேகரித்தேன். நான் மூத்த தலைவர்கள், பிரதிநிதிகளின் வேட்பாளர்.
சோனியா காந்தி குடும்பத்தினர் போட்டியிட மறுத்துவிட்டதால் கட்சியின் அனைத்து தரப்பு நிர்வாகிகளும் போட்டியிடுமாறு என்னை வலியுறுத்தினர். கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கூட்டாக பணியாற்றுகிறார்கள். இங்கு கட்சி ஒற்றுமையாக உள்ளது. வருகிற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும்.
இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.