மணிப்பூர் சம்பவம்: பிரதமர் கண்டனம் தெரிவித்த பிறகும் அரசியல் செய்வது சரியல்ல - மத்திய மந்திரி ஜிதேந்திரசிங்
|பிரதமர் மோடி அறிக்கை வெளியிட்ட பிறகும் மணிப்பூர் சம்பவம் குறித்து அரசியல் செய்வதில் அர்த்தம் இல்லை என்று மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் கூறினார்.
ஜம்மு,
பிரதமர் அலுவலக மந்திரி ஜிதேந்திரசிங், நேற்று காஷ்மீரின் ஜம்முவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மணிப்பூர் சம்பவத்தால், ஒட்டுமொத்த நாடும் வெட்கத்தால் தலைகுனிகிறது என்றும், குற்றவாளிகளை தப்பவிட மாட்டோம் என்றும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே பிரதமர் மோடி கூறிவிட்டார்.
மத்திய அரசின் நோக்கத்தை அவரது அறிக்கை தெளிவாக தெரிவித்து விட்டது. இதற்கு மேல் சொல்லத் தேவையில்லை. அதன்பிறகும் எதிர்க்கட்சிகள் இதில் அரசியல் செய்வதில் அர்த்தம் இல்லை.
பாகிஸ்தான் சார்பில் பேசுவதா?
மோடி அரசு தொடர்பாக எல்லாவற்றிலும் குற்றம் காண வேண்டும் என்ற ஒற்றை செயல்திட்டத்திலேயே எதிர்க்கட்சிகள் இயங்குகின்றன. குற்றம் காணும் ஆர்வத்தில் அவர்கள் அன்னை பாரதத்திடமே குற்றம் காண தொடங்கி விட்டனர்.
புல்வாமா தாக்குதல், செயற்கையாக நடத்தப்பட்டது என்று மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இது, பாகிஸ்தான் சார்பில் பேசுவது போல் இருக்கிறது.
புல்வாமா போன்ற தேசநலன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் அரசியலுக்கு அப்பாற்பட்டு கட்சிகள் செயல்பட வேண்டும் என்பதே நாம் கடைபிடிக்கும் மரபு.
பலவீனம்
நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் கைகோர்த்திருப்பது, தாங்கள் பலவீனமாக இருப்பதை அவர்கள் உணர்ந்திருப்பதையே காட்டுகிறது.
அதனால், பா.ஜனதாவின் சவால்களை எதிர்கொள்ள முடிந்த அளவுக்கு முயற்சிக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.