< Back
தேசிய செய்திகள்
குஜராத் கலவரம்: டீஸ்டா செடல்வாட் உடனடியாக சரணடைய ஐகோர்ட்டு உத்தரவு - இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
தேசிய செய்திகள்

குஜராத் கலவரம்: டீஸ்டா செடல்வாட் உடனடியாக சரணடைய ஐகோர்ட்டு உத்தரவு - இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

தினத்தந்தி
|
1 July 2023 8:34 PM IST

டீஸ்டா செடல்வாட் உடனடியாக சரணடையும்படி குஜராத் ஐகோர்ட்டு இன்று உத்தரவிட்ட நிலையில் உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

புதுடெல்லி,

கடந்த 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பாக அம்மாநில அப்போதைய முதல்-மந்திரியும், தற்போதைய பிரதமருமான மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில் பிரதமர் மோடி குற்றமற்றவர் என தீர்ப்பில் கூறப்பட்டது.

இதனிடையே, போலி ஆதாரம் வைத்து வழக்கு தொடுத்ததாக குஜராத் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட்டை அகமதாபாத் காவல்துறையின் குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

2002ம் ஆண்டு குஜராத் கலவர வழக்குகளில் அப்பாவி மக்களை கைது செய்ய போலியான ஆவணங்களை தயாரித்ததாக கூறி முன்னாள் டி.ஜி.பி ஆர்.பி.ஸ்ரீகுமார், சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஜூன் 25-ம் தேதி கைது செய்தனர்.

டீஸ்டா செடல்வாட் கைது செய்யப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்தது உலக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த டீஸ்டா செடல்வாட் தனக்கு ஜாமின் வழங்கும்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு செப்டம்பர் 2ம் தேதி இடைக்கால ஜாமின் வழங்கியது. இதனை தொடர்ந்து டீஸ்டா செடல்வாட் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். பின்னர், அவர் குஜராத் ஐகோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்த நிலையில் கடந்த சில மாதங்களாக டீஸ்டா செடல்வாட்டின் ஜாமினை ஐகோர்ட்டு நீடித்து வந்தது.

இந்நிலையில், டீஸ்டா செடல்வாட்டின் ஜாமின் மனு இன்று குஜராத் ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டீஸ்டா செடல்வாட்டின் ஜாமினை நீட்டிக்க கோர்ட்டு மறுத்துவிட்டது. மேலும், டீஸ்டா உடனடியாக சரணடைய வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

உடனடியாக சரணடைய வேண்டும் என குஜராத் ஐகோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் அந்த உத்தரவை எதிர்த்து டீஸ்டா செடல்வாட் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். தனக்கு இடைக்கால ஜாமின் வழங்கும்படி டீஸ்டா தாக்கல் செய்த இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு இன்று மாலையே அவரச வழக்காக விசாரித்தது.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பிரசாந்த் குமார், ஏஎஸ் ஒஹா தலைமையிலான அமர்வு விசாரணைக்கு வந்தது. அப்போது டீஸ்டா செடல்வாட் உடனடியாக சரணடைய வேண்டும் என குஜராத் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

மேலும், டீஸ்டா செடல்வாட்வுக்கு இடைக்கால ஜாமின் வழங்கவும் சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. அதேவேளை, இந்த வழக்கை கூடுதல் அமர்வுக்கு மாற்றக்கோரி தலைமை நீதிபதிக்கு இரு நீதிபதிகள் அமர்வு பரிந்துரை செய்துள்ளது.

இந்த வழக்கை கூடுதல் அமர்வுக்கு மாற்ற இரு நீதிபதிகள் அமர்வு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ள நிலையில் டீஸ்டா செடல்வாட்வுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோர்ட்டு மறுத்துவிட்டது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு முடிவு எடுக்காத நிலையில் உடனடியாக சரணடையும்படி குஜராத் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு தற்போது வரை அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்