லடாக் எல்லையில் சீன படைகளின் எண்ணிக்கை குறையவில்லை - இந்திய ராணுவ தளபதி
|லடாக் எல்லையில் நிலைமை கணிக்க முடியாததாக உள்ளது என்று இந்திய ரணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியா-சீன படைகள் இடையே லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜுன் 15-ம் தேதி நள்ளிரவு மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மோதலில் தங்கள் தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீனா தெரிவித்துள்ளது.
இந்த மோதலை தொடர்ந்து எல்லையில் இருநாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளும் தலா 50 ஆயிரம் வீரர்களை எல்லையில் குவித்து வைத்துள்ளது.
அதேவேளை எல்லையில் இருந்து படைகளை திரும்பப்பெறுவது தொடர்பாக இருநாடுகளும் இதுவரை 16 கட்ட ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.
பேச்சுவார்த்தையின் பலனாக எல்லையின் 5 இடங்களில் சீன படைகள் பின்வாங்கியுள்ளன. ஆனால், மேலும் 2 இடங்களில் சீன படைகள் இதுவரை பின்வாங்கவில்லை.
இந்நிலையில், டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே பங்கேற்றார். அப்போது, லடாக் எல்லை பிரச்சினை தொடர்பாக எழுப்பபட்ட கேள்விக்கு மனோஜ் பாண்டே பதிலளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
எல்லை நிலவரத்தை ஒற்றை வார்த்தையில் கூறவேண்டுமானால், நிலைமை நிலையாகவும் அதேவேளை கணிக்க முடியாததாக உள்ளது.
பேச்சுவார்த்தை மூலம் 5 இடங்களில் படைகள் திரும்பப்பெறப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள டெம்சோக், டீப்சங் ஆகிய 2 பகுதிகளில் இருந்து படைகளை பின்வாங்குவது தொடர்பாக அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
படைகள் பின்வாங்கியபோதும் லடாக் எல்லையில் சீன படைகளின் எண்ணிக்கை குறையவில்லை. குறிப்பாக, எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் ஜி695 என்ற நெடுஞ்சாலையை சீனா சமீபத்தில் அமைத்துள்ளது. இந்த சாலை எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சாலைக்கு இணையாக ஒரு எல்லையில் இருந்து மற்றொரு எல்லையை சுலபமாக இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் மூலம் படைகளை சீனா ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக கொண்டுவருவதுடன், படைகள் வேகமாக முன்னேறவும் வழிவகுக்கும்' என்றார்.