யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி. நடத்திய தேர்வில் வினாத்தாள் கசிவு இல்லை: மத்திய அரசு தகவல்
|நீட் தேர்வில் நடந்த மோசடி, ஆள்மாறாட்டம் மற்றும் முறைகேடுகள் உள்ளிட்டவை பற்றி சி.பி.ஐ. அமைப்பு விரிவான விசாரணை மேற்கொள்கிறது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மேலவையில் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் ஆள்சேர்ப்புக்கான தேர்வில் வினாத்தாள் கசிவு பற்றிய கேள்வி ஒன்றிற்கு, மத்திய அதிகாரிகள் துறைக்கான இணை மந்திரி ஜிதேந்திரா சிங் எழுத்துப்பூர்வ முறையில் இன்று பதிலளித்து உள்ளார்.
அதில், தேசிய தேர்வு முகமை, கடந்த மே 5-ந்தேதி இளநிலைக்கான நீட் தேர்வை (ஓ.எம்.ஆர். முறையில்) நடத்தியது. இந்த தேர்வில் மோசடி, ஆள்மாறாட்டம் மற்றும் முறைகேடுகள் உள்ளிட்டவை நடந்துள்ளன என புகார்கள் கூறப்பட்டன. இதுபற்றி ஆய்வு செய்த பின்னர், விரிவான விசாரணையை மேற்கொள்ளும்படி கடந்த ஜூன் 22-ந்தேதி சி.பி.ஐ. அமைப்பிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது என தெரிவித்து உள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.), பணியாளர் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி.), ரெயில்வே ஆள்சேர்ப்பு வாரியம் (ஆர்.ஆர்.பி.) மற்றும் வங்கி பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவை நடத்தி வரும் ஆள்சேர்ப்புக்கான தேர்வுகளில் வினாத்தாள் கசிந்ததற்கான எந்தவொரு சம்பவமோ அல்லது நிகழ்வோ நடைபெறவில்லை என்றும் சிங் தெரிவித்து உள்ளார்.
பொது தேர்வுகளில் முறையற்ற விசயங்களை தடுக்கும் வகையில், பொது தேர்வு (அநியாயங்களை தடுக்கும் வகையிலான) சட்டம், 2024-ஐ அரசு செயல்படுத்தி உள்ளது. அடுத்து, இந்த சட்டத்தின் கீழ் அது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.