< Back
தேசிய செய்திகள்
தீவிர அரசியலில் இருந்து விலகலா..? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மாயாவதி

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

தீவிர அரசியலில் இருந்து விலகலா..? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மாயாவதி

தினத்தந்தி
|
27 Aug 2024 6:50 AM IST

தனது அரசியல் பயணம் குறித்து சில சாதிவெறி ஊடகங்கள் பொய்யான செய்திகளை பரப்பி வருவதாக மாயாவதி தெரிவித்துள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி (வயது 68) தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. இதை அவர் திட்டவட்டமாக மறுத்து உள்ளார். மேலும் இந்த தகவல்களை பரப்பிய ஊடகங்களையும் அவர் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், 'அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினரை பலவீனமாக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. சுயமரியாதை மற்றும் சுயகவுரவம் மிக்க கட்சியாக பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்து செயல்படும். எனது கடைசி மூச்சு வரை கட்சியை இதே பாதையில் வழிநடத்துவேன்.

தீவிர அரசியலில் இருந்து நான் ஓய்வு பெறுவது என்ற கேள்விக்கே இடமில்லை. நான் இல்லாதபோது அல்லது உடல்நிலை சரியில்லாத நேரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் வாரிசாக ஆகாஷ் ஆனந்தை முன்னிறுத்தியது முதல், சில சாதிவெறி ஊடகங்கள் இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றன. எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதற்கு முன்பு நான் ஜனாதிபதி பதவியை ஏற்க இருப்பதாகவும் வதந்தியைப் பரப்பினார்கள். முன்பு கட்சியின் நிறுவனர் கான்ஷிராமுக்கும் ஜனாதிபதி பதவிக்காக அழைப்பு வந்தது. ஆனால், அப்பதவியை ஏற்பது என்பது அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது என்றாகிவிடும். எனவே கட்சியின் நலன் கருதி அரசியலில் தொடர்ந்து ஈடுபட அவர் முடிவு செய்தார். பகுஜன் சமாஜ் கட்சியின் சுயமரியாதை மற்றும் சுயமதிப்புக்காக எனது கடைசி மூச்சு வரை அர்ப்பணிப்புடன் உழைப்பேன் ' என்று மாயாவதி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்