< Back
தேசிய செய்திகள்
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா?  மத்திய அரசு விளக்கம்
தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? மத்திய அரசு விளக்கம்

தினத்தந்தி
|
3 Jan 2024 3:14 PM IST

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படலாம் என்ற எதிர்ப்பார்ப்பு வாகன ஓட்டிகள் மத்தியில் நிலவியது.

புதுடெல்லி,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினம்தோறும் நிர்ணயிக்கப்படும். கேஸ் சிலிண்டர் விலை மாதத்திற்கு இருமுறை நிர்ணயிக்கப்படும். இந்த நடைமுறையைத்தான் எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

தற்போது சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ102.63-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 லிட்டர் டீசல் ரூ94.24-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 592 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அடுத்த சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இதனால் தேர்தலுக்கு முன்பாக மக்களை கவரும் வகையில் சில அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குளிர் காலத்தில் கச்சா எண்ணெய் தேவை குறைந்து இருப்பதால் பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் பரவி வந்தன. பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்கவும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.6 குறைக்கவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய நிதி அமைச்சகம் கடிதம் அனுப்பி இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனால், பெட்ரோல், டீசல் விலை குறைக்கபடுமா? என்ற எதிர்பார்ப்பு வாகன ஓட்டிகள் மத்தியில் நிலவியது.

இந்த நிலையில், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இது தொடர்பாக இன்று அளித்த பேட்டியில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார் இது தொடர்பாக ஹர்தீப் சிங் கூறுகையில், "பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தற்போதைக்கு இல்லை. தெற்காசிய நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை 40 முதல் 80 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது" என்றார்.

மேலும் செய்திகள்