கூடங்குளம் மக்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை - மத்திய அரசு பதில்
|கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு நிலம் வழங்கிய மக்களுக்கு வேலை வழங்குவது தொடர்பாக எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் ராஜேஷ்குமார், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு வேலை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதா? இதுவரை வழங்கிய வேலை விவரங்கள் என்ன? என்பது தொடர்பான கேள்விகளை மாநிலங்களவையில் முன் வைத்தார்.
இதற்கு, பிரதமர் அலுவலகம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி (தனி பொறுப்பு) ஜிதேந்திர சிங் நேற்று பதில் அளித்தார். அந்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டதன் காரணமாக எவரும் இடமாற்றம் செய்யப்படவில்லை. வேலை வழங்குவது தொடர்பாக நில உரிமையாளர்களுக்கு எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை.
இருப்பினும், மாநில அரசால் இறுதி செய்யப்பட்ட நிலம் மற்றும் சொத்துகளுக்கான இழப்பீடு சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது. திட்டத்தின் அமைப்பு சார்பில் உள்ளூர் மக்களுக்கு அணுமின் நிலையத்தில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டது.
தற்போதுள்ள வழிகாட்டுதல்களின்படி, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் குரூப் 'சி' பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்புகளில், அணுமின் திட்டத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வயது மற்றும் அத்தியாவசியத் தகுதிகளில் மதிப்பெண்களின் சதவீதத்தில் தளர்வு வழங்கப்படுகிறது. இதுவரை, 72 பேர் இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை மூலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும், ஒப்பந்ததாரர்களுடன் ஏராளமான உள்ளூர் மக்களும் வேலை பார்க்கிறார்கள். இதுதவிர, பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதில் உள்ளூர் மக்களுக்கு வணிக வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு உள்ளன என்று பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.