< Back
தேசிய செய்திகள்
எந்த அதிகார பதவியும் சட்டத்திற்கு மேலானது அல்ல - கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன்

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

எந்த அதிகார பதவியும் சட்டத்திற்கு மேலானது அல்ல - கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன்

தினத்தந்தி
|
28 Jan 2024 9:41 PM IST

கொல்லம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற கவர்னருக்கு இந்திய மாணவர்கள் சங்கத்தினர் கருப்பு கொடி காட்டினர்.

திருவனந்தபுரம்,

எந்த அதிகார பதவியும் சட்டத்திற்கு மேலானது அல்ல என கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும், கேரள அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், நேற்று கொல்லம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற கவர்னருக்கு இந்திய மாணவர்கள் சங்கத்தினர் கருப்பு கொடி காட்டினர்.

இதனால் அதிருப்தியடைந்த கவர்னர் திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதனையடுத்து, கவர்னருக்கு எதிராக நடைபெற்ற வன்முறை குறித்து மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது. இந்த நிலையில், கவர்னரின் செயலுக்கு அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

போலீசார் அவர் விரும்பிய வகையில் செயல்படவில்லை என்று கவர்னர் புகார் கூறியுள்ளார். சிஆர்பிஎஃப் போலீசார் அவர் விருப்பப்படி நடந்து கொள்வார்களா? எந்த அதிகார பதவியும் சட்டத்திற்கு மேலானது அல்ல.

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக இம்மாதிரியான போராட்டங்கள் நடக்கும், அதற்கு எதிர்வினையாற்றும் போது ஒரு வரைமுறையை கடைபிடிக்க வேண்டும். முதல்வருக்கு எதிரான போராட்டங்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்று கவர்னர் கேட்டுள்ளார். நான் பல பயணங்களை மேற்கொண்டுள்ளேன். அதற்கு முன்பாக நான் பயணிப்பதற்கு அந்தப் பாதை பாதுகாப்பாக இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்வேன்.

அவர் நடந்து கொண்டது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு எதிரானது. ஒரு போராட்டம் நடக்கும் போது பயணிக்க அந்தப்பாதை பாதுகாப்பானது தானா என்பதை போலீசார் உறுதி செய்வார்கள் என்பது கவர்னருக்கு தெரியும். போராட்டக்காரர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள யாராவது தங்களின் வாகனத்தை விட்டு இறங்குவதை எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறோமா?

சட்டமன்றத்தில் கொள்கை விளக்க உரையின் கடைசி பத்தியை மட்டும் வாசிக்க வேண்டும் என்ற கவர்னரின் முடிவு அரசியல் சாசனத்தை அவமதிக்கும் செயல். கொள்கை விளக்க உரையை வாசிக்க கவர்னருக்கு நேரமில்லை, ஆனால், சாலையில் அமர்ந்து 1.30 மணிநேரம் போராட்டம் நடத்த அவருக்கு நேரம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்