< Back
தேசிய செய்திகள்
கொரோனா விவகாரத்தில் அரசியல் செய்யவில்லை: மத்திய சுகாதார மந்திரி
தேசிய செய்திகள்

கொரோனா விவகாரத்தில் அரசியல் செய்யவில்லை: மத்திய சுகாதார மந்திரி

தினத்தந்தி
|
22 Dec 2022 4:03 PM IST

கொரோனா விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை என மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் இன்று பேசியுள்ளார்.



புதுடெல்லி,


இந்தியாவில் 3 கொரோனா அலைகளை மக்கள் சந்தித்த நிலையில், பரவல் சமீப காலங்களாக குறைந்து, பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புதல், பண்டிகை கொண்டாட்டங்கள் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சீனாவில் ஏற்பட்டுள்ள புதுவகை கொரோனா பரவலால் அமெரிக்கா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன. இந்தியாவிலும், அரசு அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த சூழலில் கன்னியாகுமரி முதல் காஷ்மீரி வரையிலான ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

ராகுல் காந்தி மற்றும் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டிற்கு மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இதுதொடர்பாக கடிதம் எழுதி உள்ளார்.

ஒற்றுமை யாத்திரையில் முகக்கவசம், சானிடைசர் பயன்படுத்த வேண்டும். கொரோனா நெறிமுறையை பின்பற்றுவது சாத்தியமில்லை என்றால் தேசிய நலன் கருதி ஒற்றுமை யாத்திரையை ஒத்தி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனினும், இதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராகுல் காந்திக்கு மட்டும் அரசு கடிதம் எழுதுவது ஏன்? என கேள்வி எழுப்பியதுடன், ராகுல் காந்திக்கு கிடைத்து வரும் ஆதரவை பார்த்து மத்திய அரசு பயந்து போய் விட்டது என்றும் கூறியது. இந்த விவகாரத்தில் அரசு அரசியல் செய்கிறது என்றும் குற்றச்சாட்டு தெரிவித்தது.

கொரோனா பரவலை தடுக்க மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. முடிவில், முக கவசம் அணிவது அவசியம் என அரசு வலியுறுத்தியது.

இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற இரு அவைகளில் மந்திரி மாண்டவியா இன்று பேசுவார் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, மேலவையில் அவர் பேசும்போது, நாங்கள் கொரோனா விவகாரத்தில் அரசியல் செய்யவில்லை. நாடு முழுவதும் பெரிய மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கலன்களை நிறுவி உள்ளோம்.

அவை செயல்பாட்டில் உள்ளன. நாட்டில் போதிய அளவுக்கு உள்ள மருந்துகளை மறுஆய்வு செய்து வருகிறோம் என்று கூறியுள்ளார். சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளிடம் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனைகளை செய்ய தொடங்கியுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்