பா.ஜனதாவை எதிர்த்து போராட எந்த கட்சிக்கும் வலிமை இல்லை - ஜே.பி.நட்டா
|பா.ஜனதாவை எதிர்த்து போராட எந்தக் கட்சிக்கும் சித்தாந்தமோ, எண்ணமோ, வலிமையோ இல்லை என கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.
பா.ஜனதா அலுவலகம் திறப்பு
அசாம் தலைநகர் கவுகாத்தியில் பா.ஜனதாவின் புதிய மாநில தலைமை அலுவலகத்தை கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று திறந்து வைத்தார். பின்னர் அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வலிமைக்கு மேல் வலிமை
பா.ஜனதாவை எதிர்த்து போராட எந்தக் கட்சிக்கும் சித்தாந்தமோ, எண்ணமோ, வலிமையோ இல்லை. இதைப்போல மிகப்பெரிய கூட்டத்தை கூட்ட எந்த ஒரு கட்சியாலும் முடியாது.
கொள்கைகள் மற்றும் மதிப்பீடுகளைக் கொண்ட கட்சி என்பதால், பா.ஜனதா மட்டும்தான் மிகப்பெரிய தொண்டர் கூட்டத்தை பெற்றுள்ள ஒரே தேசியக் கட்சி ஆகும்.
கட்சியின் நிறுவனர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, சிந்தனைகள், மதிப்பீடுகள் மற்றும் கொள்கைகளாலும், அவற்றை செயல்படுத்தும் உறுதிப்பாடு கொண்ட தொண்டர்களின் பலத்தாலும் பா.ஜனதா தொடர்ந்து வலிமைக்கு மேல் வலிமை பெற்று வருகிறது.
நம்மிடம் தற்போது மக்களவையில் 300-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள், 1,053 எம்.எல்.ஏ.க்கள், 170 மேயர்கள், ஆயிரக்கணக்கான வார்டு மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்கள் உள்ளனர்.
குடும்ப கட்சிகள்
காஷ்மீர், பஞ்சாப், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரா என ஏராளமான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என எங்குமே குடும்ப கட்சிகளுக்கு எதிராக நாம் போராடி வருகிறோம்.
மோடி அரசு அசாமையும், வடகிழக்கு பகுதிகளையும் தேசிய நீரோட்டத்தில் கொண்டு வந்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், இப்பகுதியிலிருந்து யாரேனும் தங்களை சந்திக்க வந்தால் அவர்களை வேறு நாட்டைச் சேர்ந்தவர் போல கேவலமாகப் பார்த்தார்கள்.
வேலை நிறுத்தம், போராட்டம், வன்முறை, குண்டுவெடிப்புகளுக்கு பேர்பெற்ற இந்த வடகிழக்கு பிராந்தியம், பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையால் அமைதி பாதைக்கு திரும்பி இருக்கிறது.
இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார்.