ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் - மத்திய மந்திரி அமித்ஷா
|காங்கிரசின் பி ‘டீம்’ ஆன ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று மத்திய மந்திரி அமித்ஷா பரபரப்பாக பேசினார்.
அமித்ஷா 'ரோடு ஷோ'
கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. நேற்று முதல் பிரதமர் மோடி கர்நாடகத்தில் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இந்த நிலையில் மத்திய மந்திரி அமித்ஷா நேற்று கடலோர மாவட்டமான உடுப்பியில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவர் உடுப்பியில் திறந்த வாகனத்தில் 'ரோடு ஷோ' நடத்தினார். சாலையின் இருப்புறங்களிலும் ஏராளமானோர் திரண்டு அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் நடந்த பிரசாரத்தில் மத்திய மந்திரி அமித்ஷா பேசியதாவது:-
'ரிவர்ஸ் கியர்' அரசு
கர்நாடகத்தில் வருகிற 10-ந்தேதி நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் மக்கள், காங்கிரசின் 'ரிவர்ஸ் கியர்' அரசுக்கு பதிலாக பா.ஜனதாவுக்கு வாக்களித்து இரட்டை என்ஜின் ஆட்சியை தேர்ந்தெடுக்க வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் மோடி தலைமையிலான மத்திய அரசு கர்நாடகத்துக்கு ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 418 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளது. ஆனால் முன்பு இருந்த காங்கிரஸ் அரசு கர்நாடகத்துக்கு ரூ.99 ஆயிரம் கோடி மட்டுமே வழங்கியது.
காங்கிரசின் 'ரிவர்ஸ் கியர்' அரசு கர்நாடகத்தை அவர்களின் ஏ.டி.எம்.மாக பயன்படுத்தியது. செழிப்பு, வளர்ச்சி மற்றும் அமைதியை உறுதிப்படுத்த பா.ஜனதா ஆட்சிக்கு வர வேண்டும்.
உத்தரவாத அட்டை
அரசியல் ஆதாயத்திற்காக ஆட்சியில் பி.எப்.ஐ. அமைப்பை ஆதரித்த காங்கிரசை மக்கள் நம்ப வேண்டாம். பா.ஜனதா அரசு அந்த அமைப்பை தடை செய்து, அதன் தலைவர்களை சிறையில் தள்ளியது. பா.ஜனதாவின் அறிவிக்கப்பட்ட கொள்கை பயங்கரவாத செயல்களுக்கு சகிப்புத்தன்மை இல்லாதது. அதேநேரத்தில் காங்கிரஸ் தங்கள் ஆட்சியின்போது சமூகத்தை பிளவுப்படுத்த முயன்றது.
காங்கிரஸ் ெவளியிட்ட உத்தரவாத அட்டை கர்நாடகத்தில் வேலை செய்யாது. காங்கிரசின் பிழைப்புக்கே உத்தரவாதம் இல்லை. இதில் அவர்களின் ஆட்சிக்கு உத்தரவாத அட்டையை யார் நம்புவார்கள், ஊழல், சமாதான அரசியல், குடும்ப ஆட்சி மட்டுமே காங்கிரசின் உத்தரவாதங்கள்.
அசாம், திரிபுரா, மணிப்பூர், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் காலத்தில் வெளியிட்ட காங்கிரஸ் உத்தரவாத திட்டங்களை மக்கள் நிராகரித்து விட்டனர். கர்நாடக மக்களும் இதை பின்பற்றுவார்கள்.
காங்கிரசின் பி 'டீம்'
பா.ஜனதா அரசு முஸ்லிம்களுக்கான 4 சதவீத தனி இடஒதுக்கீட்ைட ரத்து செய்தது. லிங்காயத், ஒக்கலிகர், ஓ.பி.சி. மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவுகளுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தி சமத்துவத்தில் நம்பிக்கை வைத்துள்ளது. அம்பேத்கர் கூட மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஆதரிக்கவில்லை.
மாநில மக்கள் கட்சியான ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம். ஜனதாதளம்(எஸ்) கட்சி காங்கிரசின் பி 'டீம்'. அவர்களுக்கு வாக்களிப்பது, காங்கிரசுக்கு வாக்களிப்பது போன்றதாகும். 2023-ம் ஆண்டு பா.ஜனதாவுக்கு வாக்களிப்பது இரட்டை என்ஜின் ஆட்சி மூலம் கர்நாடகத்தின் வளர்ச்சியை உறுதி செய்யும். இந்த ெவற்றி 2024-ம் ஆண்டு மோடி தலைமையிலான மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு அடித்தளமிடும்
இவ்வாறு அவர் பேசினார்.