< Back
தேசிய செய்திகள்
நியூசிலாந்து, சுவிட்சர்லாந்துக்கு செல்ல வேண்டியதில்லை; லட்சத்தீவில் அனைத்தும் உள்ளது - மத்திய சுற்றுலாத்துறை மந்திரி
தேசிய செய்திகள்

நியூசிலாந்து, சுவிட்சர்லாந்துக்கு செல்ல வேண்டியதில்லை; லட்சத்தீவில் அனைத்தும் உள்ளது - மத்திய சுற்றுலாத்துறை மந்திரி

தினத்தந்தி
|
7 Jan 2024 9:36 PM IST

இனி வரும் காலங்களில் லட்சத்தீவு சிறந்த சுற்றுலா தலமாக இருக்கும் என மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சமீபத்தில் லட்சத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து லட்சத்தீவு கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அவர், பின்னர் ஸ்நோர்கெலிங் முறையில் கடலில் நீந்தினார்.

இது தொடர்பான புகைப்படங்களை பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில், "லட்சத்தீவு மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்குள்ள தீவின் வியக்க வைக்கும் அழகு மற்றும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பை பார்த்து நான் பிரமிப்பில் இருக்கிறேன். அந்த மக்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன்'' என தெரிவித்து இருந்தார்.

பிரதமர் மோடியின் இந்த பதிவு தொடர்பாக மாலத்தீவு அரசின் மந்திரிகள் சிலர் கேலி செய்யும் வகையிலும், இந்தியர்கள் மீது இனவெறியை காட்டும் வகையிலும் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டிருந்தனர். இதற்கு இந்தியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் மாலத்திவுக்கான விமான டிக்கெட் முன்பதிவுகளை ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ரத்து செய்ததாகவும் தகவல் வெளியானது.

இதனிடையே மந்திரிகள் கூறியது அவர்களின் தனிப்பட்ட கருத்து என்றும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாலத்தீவு அரசு தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் இந்தியர்கள் குறித்து விமர்சன பதிவுகளை வெளியிட்ட 3 மந்திரிகளை சஸ்பெண்டு செய்து மாலத்தீவு அரசு அதிரடியாக உத்தரவிட்டது.

இந்த நிலையில் இனி வரும் காலங்களில் லட்சத்தீவு சிறந்த சுற்றுலா தலமாக இருக்கும் என மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"லட்சத்தீவில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன. சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவுக்கு சென்றார். இனி வரும் காலங்களில் லட்சத்தீவு சிறந்த சுற்றுலா தலமாக இருக்கும்.

அங்கு ஒரு விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும். அரசாங்கம் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறது. நாம் நியூசிலாந்து அல்லது சுவிட்சர்லாந்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. லட்சத்தீவில் எல்லாம் இருக்கிறது. மக்களே இதன் தூதுவர்களாக மாற வேண்டும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்