< Back
தேசிய செய்திகள்
பிபர்ஜாய் புயலால் குஜராத்தில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை - மத்திய மந்திரி அமித்ஷா
தேசிய செய்திகள்

'பிபர்ஜாய் புயலால் குஜராத்தில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை' - மத்திய மந்திரி அமித்ஷா

தினத்தந்தி
|
17 Jun 2023 7:57 PM IST

பிபர்ஜாய் புயல் பாதிப்புகள் குறித்து குஜராத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

காந்திநகர்,

அரபிக்கடலில் 10 நாட்களுக்கு மேலாக நிலை கொண்டிருந்த பிபர்ஜாய் புயல், அதிதீவிர சூறாவளியாக மாறிய நிலையில், நேற்று முன்தினம் குஜராத்தின் கட்ச் பகுதியில் ஜகாவு துறைமுகம் அருகே மாலை 6.30 மணி முதல் கரையை கடந்தது.

புயல் கரையை கடந்தபோது 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதனால், குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சரிந்தன. 1000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின. 600 மரங்கள் வேருடன் சய்ந்தன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. காற்றில் அடித்து செல்லப்பட்டும், மரங்கள் விழுந்தும் பல வீடுகள் சேதமடைந்தன.

இந்த நிலையில் பிபர்ஜாய் புயலின் பாதிப்புகள் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆய்வு மேற்கொண்டார். குஜராத் மாநிலத்தின் முதல்-மந்திரியுடன் இணைந்து ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்த அமித்ஷா, மாண்ட்வி சிவில் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதைத் தொடர்ந்து அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "பிபர்ஜாய் புயலால் குஜராத்தில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை. பிபர்ஜாய் புயலில் 47 பேர் காயமடைந்துள்ளனர். 234 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. புயலின்போது உயிர்களை பாதுகாக்க குஜராத் அரசு மற்றும் மத்திய அமைப்புகள் பணியாற்றிய விதம் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது" என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்