எந்தவொரு மொழியையும் மரணிக்க விட்டு விட கூடாது; மத்திய மந்திரி அமித்ஷா வலியுறுத்தல்
|நாட்டில் எந்தவொரு மொழியையும் மக்கள் மரணிக்க விட்டு விட கூடாது என மத்திய மந்திரி அமித்ஷா வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள சர்தார் பட்டேல் பள்ளியில் நடந்த நாட்டின் முதல் உள்துறை மந்திரியான சர்தார் வல்லபாய் பட்டேலின் 147-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார்.
அவர் நிகழ்ச்சியில் பேசும்போது, நாட்டில் எத்தனை மொழிகள் உள்ளன என்பது ஒரு விசயமே இல்லை. ஆனால், ஒரு மொழி கூட மரணிக்க விட்டு விட கூடாது என்று இந்தியர்களாகிய நாம் முடிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது என பேசியுள்ளார்.
நான் எந்தவொரு மொழிக்கும் எதிரானவன் கிடையாது. ஒருவர் ஆங்கிலம், ஜெர்மன், ரஷிய அல்லது பிரெஞ்சு மொழியை கற்கலாம். அதில் எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆனால், உங்களது சொந்த மொழியை நீங்கள் விட்டு விட கூடாது என கூறியுள்ளார்.
இந்த பேச்சின்போது, குழந்தைகளிடம் பேசும்போது அவர்களுடைய தாய்மொழியிலேயே பேசும்படி ஆசிரியர்களிடம் அவர் கேட்டு கொண்டார். இதேபோன்று, இளைஞர்களும் தங்களது தாய்மொழியை பாதுகாத்து, முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று மத்திய மந்திரி அமித்ஷா கேட்டு கொண்டார்.