குடியுரிமை சட்டத்தால் எந்த இந்தியருக்கும் பாதிப்பு வராது- அமித்ஷா திட்டவட்டம்
|சி.ஏ.ஏ. குடியுரிமை வழங்கும் ஒரு சட்டம் யாருடைய குடியுரிமையையும் இது பறிக்காது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
ஐதராபாத்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
குடியுரிமை சட்டம் அமலாக்கத்தால் நாட்டின் சிறுபான்மையினர் குடியுரிமையை இழக்க நேரிடும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், ஐதராபாத் மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஓவைசியும் பொய் சொல்கிறார்கள். வாக்கு வங்கி அரசியல் காரணமாக குடியுரிமை திருத்த சட்டத்தை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது.
தங்களின் நம்பிக்கையை காப்பாற்றவும், கவுரவத்திற்காகவும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இந்தியாவுக்கு வந்தனர், ஆனால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை .குடியுரிமை வழங்கப்படாதபோது அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் அவமதிக்கப்பட்டதாக கருதினர். இந்து, பவுத்த, ஜெயின் மற்றும் சீக்கிய அகதிகளுக்கு குடியுரிமை திருத்த சட்டம் மூலம் குடியுரிமை வழங்குவதன் மூலம் பிரதமர் மோடி அவர்களை கவுரவித்து இருக்கிறார்.
குடியுரிமை திருத்த சட்டம் இந்தியர்கள் யாருடைய குடியுரிமையை பறிக்காது. நம்நாட்டில் வாழும் சிறுபான்மையினருக்கு இந்த சட்டம் காரணமாக எந்தவொரு பாதிப்பும் வராது. எந்த இந்திய குடிமகனும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள் என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். இது குடியுரிமை வழங்கும் ஒரு சட்டம் மற்றும் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.