எந்த எரிபொருள் மீதும் தனியாக நடவடிக்கை எடுக்கக்கூடாது - ஐ.நா. மாநாட்டில் மத்திய மந்திரி வலியுறுத்தல்
|பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் எந்த எரிபொருள் மீதும் தனியாக நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று ஐ.நா. மாநாட்டில் மத்திய மந்திரி வலியுறுத்தினார்.
புதுடெல்லி,
எகிப்து நாட்டில் ஐ.நா. பருவநிலை உச்சி மாநாடு நடந்து வருகிறது. அதில், மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்தர் யாதவ் கலந்து கொண்டார். மாநாட்டில் அவர் பேசியதாவது:- பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கையில், எந்த துறையையோ, எந்த எரிபொருள் ஆதாரத்தையோ, எந்த வாயுவையோ தனிமைப்படுத்தி நடவடிக்கை எடுக்கக்கூடாது. குறிப்பிட்ட எரிபொருள்தான் மாசு பரவலுக்கு காரணம் என்று முத்திரை குத்துவதோ, சிலவற்றை கெடுதலானவை என்றும், வேறு சிலவற்றை பசுமை வாயுக்கள் என்றும் கூறுவதோ அறிவியல் அடிப்படையற்ற செயல்.
எல்லா எரிபொருட்களும் மாசு வெளியேற்றத்துக்கு காரணமானவை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். பாரீஸ் ஒப்பந்தத்தின் நீண்ட கால இலக்கு என்னவென்றால், அனைத்து புதைபடிம எரிபொருட்களையும் படிப்படியாக ஒழிப்பது ஆகும். தேசிய சூழ்நிலைக்கு ஏற்ப ஒவ்வொரு நாடும் தனக்கு பொருத்தமானதை செய்யும்.
இன்னும் பல ஆண்டுகளுக்கு மின்சார உற்பத்திக்கு இந்தியா நிலக்கரியை தொடர்ந்து சார்ந்திருக்கும். கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதில் எல்லா நாடுகளுக்கும் நியாயமான பங்கு இருக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.