2023-ல் நம்பிக்கையில்லா தீர்மானம்...! 4 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த பிரதமர் மோடி.. வைரலாகும் வீடியோ..!
|நம்பிக்கை இல்லா தீர்மானத்தை 2019-ல் பிரதமர் மோடி கணித்தது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
புதுடெல்லி
மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது என்று நேற்று முன்தினம் எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியை பேச வைப்பதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டது.
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது இந்தியா கூட்டணியின் ஒட்டுமொத்த முடிவு என்ற போதிலும், அந்த தீர்மானத்தை அசாம் மாநிலத்தை சேர்ந்த மக்களவை காங்கிரஸ் துணைத்தலைவர் கவுரவ் கோகாய் கொண்டு வந்தார்
இந்த தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதாக கூறிய சபாநாயகர் ஓம்பிர்லா விவாதம் நடைபெறும் தேதி குறித்து அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் முடிவெடுக்கப்படும் என்றார்.
இந்நிலையில், இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை 2019-ல் பிரதமர் மோடி கணித்தது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கடைசியாக பிரதமர் மோடிக்கு எதிராக 2019- ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. ஆந்திராவிற்கு தேவையான நிதியை முறையாக ஒதுக்கவில்லை என குற்றம்சாட்டி இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. எனினும் இந்த தீர்மானம் வெற்றி பெறவில்லை. அப்போது பிரதமர் மோடி, 2023- ஆம் ஆண்டும் இதேப்போல் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என கூறியிருந்தார். மோடியின் இந்த பேச்சை பா.ஜனதா கட்சியினர் தற்போது பகிர்ந்து வருகின்றனர்.
543 இடங்களை கொண்ட மக்களவையில் 5 காலியிடங்கள் உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 332 எம்.பி.க்கள் உள்ளனர். இந்தியா கூட்டணிக்கு 140 எம்.பி.க்கள் உள்ளனர். எந்த அணியும் சாராத 60-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களும் உள்ளனர்.
எனவே, நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற வாய்ப்பு இல்லை. இருப்பினும், மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி அளிப்பதற்கான வியூகமாக இதை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன.