< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் திட்டம்
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் திட்டம்

தினத்தந்தி
|
29 March 2023 12:27 AM IST

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது தொடர்பாக மக்களவை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

எம்.பி.க்கள் கூட்டத்தில் முடிவு

அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு சூரத் கோர்ட்டு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததை தொடர்ந்து, அவர் எம்.பி. பதவியை இழந்ததாக மக்களவை செயலகம் அறிவித்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்திலும், நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது.

இந்தநிலையில், மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. நேற்று காலையில் நடந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

பாரபட்சம்

இதைத்தொடர்ந்து, மற்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திங்கட்கிழமை, இத்தீர்மானம் கொண்டுவரப்படும் என்று தெரிகிறது. சூரத் கோர்ட்டு தீர்ப்பு அளித்த 24 மணி நேரத்துக்குள் ராகுல்காந்தி பதவியை பறிப்பதில் அவசரம் காட்டியதாக நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் சபாநாயகர் மீது குற்றம் சாட்டப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. சபாநாயகர் பாரபட்சமாக நடந்து கொண்டதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்படும் என்று தெரிகிறது.

பிற கட்சிகள் எதிர்ப்பு

நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர 50 எம்.பி.க்களின் கையெழுத்தும், ஆதரவும் தேவைப்படும். அதில் சிக்கல் இல்லை. ஆனால், சபை அமைதியாக நடக்கும்போது மட்டுமே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடியும். தற்போது நடந்து வரும் அமளியை காரணமாக வைத்து, அத்தீர்மானத்தை கொண்டுவர அனுமதி மறுத்து விடுவார்களோ என்று காங்கிரஸ் தரப்பில் அச்சம் நிலவுகிறது.

அதே சமயத்தில், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு சில எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை இது சீர்குலைத்து விடும் என்று அக்கட்சிகள் கூறுகின்றன.

மேலும் செய்திகள்