வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு
|குறுகிய கால கடனுக்கான வட்டியான ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டியான ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 6.5 சதவீதமாகவே நீடிக்கும் என்றும் வங்கிகளின் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து குறுகிய கால மற்றும் நீண்டகால கடன்களை பெறுகின்றன. குறுகிய கால கடன்களுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி விகிதமே ரெப்போ வட்டி விகிதம் ஆகும். ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு, வாகனங்களுக்கான கடன் விகிதத்தில் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மாற்றவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.