நமது படை வீரர்களின் வீரத்தை எவ்வளவு புகழ்ந்தாலும் போதாது - ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்
|கல்வான் பள்ளத்தாக்கிலும், அருணாசல பிரதேசத்திலும் சீனாவுக்கு எதிரான நமது படை வீரர்களின் வீரத்தை எவ்வளவு புகழ்ந்தாலும் போதாது என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
படைவீரர்களுக்கு புகழாரம்
டெல்லியில் இந்திய வர்த்தகம், தொழில் கூட்டமைப்பு 'பிக்கி' சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த மோதலிலும், சமீபத்தில் அருணாசலபிரதேசத்தில் நடந்த மோதலிலும் இந்திய ஆயுதப்படைகள் காட்டிய துணிச்சலும், வீரமும் மகத்தான போற்றுதலுக்கு உரியது. அவர்களை எவ்வளவு புகழ்ந்தாலும் அது போதாது. நாங்கள் ஒரு போதும் எந்தவொரு எதிர்க்கட்சித்தலைவரின் நோக்கத்தைக்குறித்தும் கேள்வி எழுப்பியதில்லை. கொள்கைகள் அடிப்படையில் மட்டுமேதான் நாங்கள் விவாதித்துள்ளோம். அரசியல், சத்தியத்தின் அடிப்படையிலானதாக இருக்க வேண்டும். நீண்ட காலத்துக்கு பொய்யின் அடிப்படையில் அரசியல் நடத்த முடியாது. சரியான பாதையில் சமூகத்தை அழைத்துச்செல்லும் செயல்முறைதான் அரசியல் ஆகும்.
உலகமே நமது குடும்பம்
உலகத்தின் நன்மைக்காகவும், செழுமைக்காகவும்தான் இந்தியா வல்லரசு நாடு ஆக விரும்புகிறது. உலகமே நமது குடும்பம். எந்தவொரு நாட்டின் ஒரு அங்குலத்தைக்கூட பிடிக்கும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை.
நாட்டின் விடுதலையின்போது இந்திய பொருளாதாரம், 6 அல்லது 7 பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்தது. ஆனால் சீனாவில் 1949-ம் ஆண்டு நடந்த புரட்சிக்கு பின்னர் ஒரு புதிய அமைப்பை கொண்டு வந்தனர். அதன் பின்னர் அந்த நாட்டின் பொருளாதாரம், நமது பொருளாதாரத்தை விட குறைந்த பொருளாதாரமாக ஆனது. 1980 வரையில் இந்தியாவும், சீனாவும் ஒன்றாகத்தான் நடை போட்டன. ஆனால் அந்த அண்டை நாட்டில் பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. 1991-ம் ஆண்டில் நமது நாட்டிலும் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடங்கின. ஆனால் சீனா குறுகிய காலத்தில் பெரும் வளர்ச்சி கண்டது. அமெரிக்காவைத் தவிர்த்து பிற நாடுகளை அந்த நாடு தனது வளர்ச்சி வேகத்தில் பின்னுக்குத் தள்ளியது.
இந்திய பொருளாதார நிலைமை
21-ம் நூற்றாண்டில் உலகின் முன்னணி 10 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியது. ஆனால் இந்தியாவில் நடக்க வேண்டிய வளர்ச்சி நடக்கவில்லை. ஆனால் 2014-ம் ஆண்டில் வளர்ச்சியின் புதிய சகாப்தம் தொடங்கியது. (இந்த ஆண்டில்தான் மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது.)
அரசின் தலைமை பொறுப்புக்கு பிரதமர் மோடி வந்தபோது, இந்திய பொருளாதாரம் உலகின் 9-வது பெரிய பொருளாதாரமாக இருந்தது. அதன் மதிப்பு 2 லட்சம் கோடி டாலர் ஆகும். இன்றைக்கு இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறி உள்ளது. இந்திய பொருளாதாரத்தின் அளவு 3½ லட்சம் கோடி டாலர் ஆகும்.
இன்றைக்கு இந்தியா உலகின் அற்புதமான 5 பொருளாதார நாடுகளில் ஒன்றாகி உள்ளது.
விலைவாசி உயர்வு
அதே நேரத்தில் விலைவாசி உயர்ந்துள்ளது. இதற்கு காரணம், கொரோனா பெருந்தொற்றும், உக்ரைன்போரும்தான். இவற்றால் வினியோக சங்கிலி பாதித்துள்ளது.
விலைவாசி உயர்வு என்பது நமது முன்னால் உள்ள மிகப்பெரும் பிரச்சினை. உள்ளபடியே சொல்வதானால், உலகம் இன்னும் வினியோகச் சங்கிலி உடைப்பில் இருந்து முற்றிலுமாய் மீண்டு விடவில்லை.
காரணம் எதுவாக இருந்தாலும், நமது முன்னால் பிரச்சினை இருக்கிறபோது, நாம் அதற்கு ஒரு தீர்வைக் கண்டாக வேண்டும். இந்திய பொருளாதாரம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகப்பொருளாதாரமுமே கடினமான தருணங்களைக் கடந்து கொண்டிருக்கிறது. ஆனால் மற்ற பெரிய நாடுகளைப் பார்த்தால், நமது விலைவாசி உயர்வு குறைவானதுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.