'சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி-காங்கிரஸ் இடையே கூட்டணி இல்லை' - ஜெய்ராம் ரமேஷ்
|டெல்லி, அரியானா சட்டசபை தேர்தல்களில் ஆம் ஆத்மி-காங்கிரஸ் இடையே கூட்டணி இருக்காது என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ஜார்க்கண்ட், அரியானா மற்றும் மராட்டிய மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதே போல் டெல்லியில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
முன்னதாக நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இணைந்து டெல்லியில் தேர்தலை சந்தித்தன. அதே சமயம் பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டன.
இந்த நிலையில் டெல்லி மற்றும் அரியானாவில் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி-காங்கிரஸ் இடையே கூட்டணி இருக்காது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பஞ்சாப் மற்றும் அரியானாவில் நடைபெறும் சட்டசபை தேர்தல்களில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி இருக்காது. டெல்லியிலும் சட்டசபை தேர்தலில் கூட்டணி கிடையாது என ஆம் ஆத்மி கட்சியே கூறியிருக்கிறது.
அதே சமயம் மராட்டிய மாநில சட்டசபை தேர்தலில் சிவசேனா(உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ்(சரத்சந்திர பவார்) கட்சி ஆகிய கட்சிகளுடன் எங்கள் கூட்டணி தொடரும். அதே போல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.