< Back
தேசிய செய்திகள்
மொர்பி விபத்து: காவலாளி கைது... உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை இல்லை - ராகுல்காந்தி
தேசிய செய்திகள்

மொர்பி விபத்து: காவலாளி கைது... உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை இல்லை - ராகுல்காந்தி

தினத்தந்தி
|
21 Nov 2022 8:50 PM IST

பாஜக தொடர்புடையவர்கள் என்பதால் மொர்பி பால விபத்தில் உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை இல்லை என்று ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

காந்திநகர்,

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

சாத் பூஜை மற்றும் விடுமுறையையொட்டி கடந்த அக்டோபர் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை அந்த தொங்குபாலத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

அப்போது பாரம் தாங்காமல் திடீரென தொங்குபாலம் அறுந்து விழுந்தது. இதில், விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர். 135 பேரை பலி வாங்கிய விபத்து தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குஜராத் தேர்தல் அடுத்த மாதம் 1 மற்றும் 5-ம் தேதி 2 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகளை தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், குஜராத்தின் ராஜ்கோட்டில் தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார். அப்போது பேசிய ராகுல்காந்தி, மோர்பி பால விபத்து குறித்து அப்போது செய்தியாளர்கள் என்னிடம் கேள்வி எழுப்பியபோது சுமார் 150 பேர் உயிரிழந்துள்ளனர் இது அரசியல் விவகாரம் இல்லை ஆகையால் இந்த விவகாரத்தில் நான் கூற எதுவும் இல்லை என்றேன். ஆனால், இந்த சம்பவத்திற்கு பின்னால் இருப்பவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்வி இன்று எழுகிறது. இந்த சம்பவத்திற்கு பின்னால் இருப்பவர்கள் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை? ஏனென்றால் அவர்கள் பாஜகவுடன் நல்ல தொடர்பு கொண்டுள்ளனர். பாலத்தின் காவலாளியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆனால், உண்மையான குற்றவாளிகளுக்கு எதிராக நவடிக்கை எடுக்கப்படவில்லை' என்றார்.

மேலும் செய்திகள்