மகாபாரதத்தில் வரும் திருநங்கை கதாபாத்திரத்துடன் நிதிஷ்குமாரை ஒப்பிட்ட எம்.எல்.ஏ.
|பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-ராஷ்டிரீய ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
பாட்னா,
பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-ராஷ்டிரீய ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்தநிலையில், ராஷ்டிரீய ஜனதாதளம் எம்.எல்.ஏ.வும்,அக்கட்சியின் மாநில தலைவர் ஜெகதானந்த் சிங்கின் மகனுமான சுதாகர்சிங், நிதிஷ்குமாரை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்துள்ளார்.
அவர் கூறியதாவது:-
நிதிஷ்குமார் உடனடியாக பதவி விலகி, முதல்-மந்திரி பதவியை எங்கள் தலைவர் தேஜஸ்வி யாதவிடம் ஒப்படைக்க வேண்டும். நிதிஷ்குமார் பதவி விலகினால், எல்லோரும் அவரை மறந்து விடுவார்கள். அவர் மாநிலத்துக்கு எதுவுமே செய்யவில்லை.
முன்னாள் முதல்-மந்திரிகள் கிருஷ்ண சின்கா, கர்பூரி தாக்குர் ஆகியோர் எப்போதும் நினைவில் இருப்பார்கள். அதுபோல், லாலுபிரசாத் யாதவும் நிறைய செய்துள்ளார். ஆனால், நிதிஷ்குமார் பெயர், வரலாற்றில் நிலைக்காது.
அவர் 'சிகண்டி' (மகாபாரதத்தில் வரும் திருநங்கை கதாபாத்திரம்) போன்றவர். அவர் தனது சொந்த பலத்தில் நிற்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரது கருத்து சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரீய ஜனதாதளம் ஆகிய இரு கட்சிகளுமே கண்டனம் தெரிவித்துள்ளன.