பீகார் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார் நிதிஷ் குமார்
|பீகார் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றி பெற்றது.
பாட்னா,
பீகார் மாநில முதல்-மந்திரியாக இருக்கும் நிதிஷ் குமார் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வந்தார். லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்-மந்திரியாக இருந்தார்.
திடீரென கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார், பா.ஜனதாவுடன் இணைந்தார். இதனால் தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் பா.ஜனதா ஆதரவுடன் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் பதவி ஏற்றுக் கொண்டார்.
மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற நிதிஷ்குமார் சட்டசபையில் தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டிருந்தார். பீகார் சட்டசபையில் மொத்தம் 243 எம்.எல். ஏ.க்கள் உள்ளனர். தனித்து ஆட்சி அமைக்க 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் இன்று பீகார் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் நிதிஷ் குமார் 129 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் தனது பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபித்து முதல்-மந்திரி பதவியை தக்க வைத்து கொண்டார். முன்னதாக, பீகார் சட்டசபை சபாநாயகரை நீக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. 125 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 112 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனையடுத்து, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த பீகார் சட்டசபை சபாநாயகர் அத்வா பிஹாரி சௌத்ரி நீக்கப்பட்டார்.