மக்களவை தேர்தல் முன்கூட்டியே நடத்த வாய்ப்பு..!! பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் கணிப்பு
|மக்களவை தேர்தலை முன்கூட்டியே நடத்த வாய்ப்புள்ளதாக பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
நாலந்தா,
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஆனால் இத்தேர்தலை முன்கூட்டியே அதாவது, இந்த ஆண்டு இறுதியிலேயே நடத்த மத்தியில் ஆளும் பா.ஜனதா திட்டமிட்டிருப்பதாக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் நாலந்தா திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை முதல்-மந்திரி நிதிஷ்குமார் நேற்று திறந்துவைத்தார். அப்போது அவரிடம், மம்தா பானர்ஜியின் கருத்து குறித்து நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு நிதிஷ்குமார், 'நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடக்கலாம் என்று நான் கடந்த ஏழு, எட்டு மாதங்களாகவே கூறிவருகிறேன். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை காரணமாக, அதிக தொகுதிகளில் தோல்வி ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் மத்திய பா.ஜனதா அரசு அவ்வாறு நடத்தக்கூடும். எனவே, மக்களவை தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் அணிதிரள வேண்டும். எனக்கு என்று தனிப்பட்ட லட்சியமோ, ஆசையோ இல்லை. தேர்தலுக்கு முன்பாக, பா.ஜனதாவுக்கு எதிராக அதிகமான கட்சிகளை ஒன்று திரட்ட வேண்டும் என்பதுதான் எனது ஒரே எண்ணம்.
எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்த நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். மும்பையில் நடைபெறும் 3-வது கூட்டத்துக்குப் பிறகு, 'இந்தியா' கூட்டணி மேலும் வலுப்பெறும்.
பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவடைந்துள்ளது. அது தொகுக்கப்பட்டு, விரைவில் வெளியிடப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் தாமதம் தொடர்பாக மத்திய அரசு மவுனம் காப்பது ஏன்? இதுகுறித்து பா.ஜனதா தலைவர்கள் வாய் திறக்க வேண்டும்.' என்று அவர் கூறினார்.