அருணாச்சல பிரதேசத்தில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஒரேயொரு எம்.எல்.ஏவும் பாஜகவில் இணைந்ததால் பின்னடைவு!
|அருணாச்சல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு உறுப்பினர்கள் இல்லாத நிலை உருவாகி உள்ளது.
புதுடெல்லி,
பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
அருணாச்சல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அக்கட்சியின் ஒரே ஒரு எம்எல்ஏ டெக்கி காசோ, நேற்று பா.ஜனதா தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
காசோ மற்றும் பிற தலைவர்கள் பாஜகவில் இணைவது அமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று டுவிட்டரில் பதிவிட்டு பாஜக தலைவர் நட்டா மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்மூலம், மொத்தம் 60 உறுப்பினர்களை கொண்ட அருணாச்சல பிரதேச சட்டசபையில், ஆளுங்கட்சியாக உள்ள பாஜகவின் பலம் 49 ஆக உயர்ந்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் 2019ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 15 இடங்களில் போட்டியிட்டு 7 இடங்களை வெற்றி பெற்றது. மேலும் எதிர்க்கட்சியாக உள்ளது. பாஜக 41 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், டிசம்பர் 25, 2020 அன்று, ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து விலகி ஆறு எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.
அதன்பின் ஐக்கிய ஜனதா தளத்தின் ஒரே ஒரு எம்எல்ஏவாக இருந்துவந்த டெக்கி காசோ தற்போது பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். இதன்மூலம் அருணாச்சல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு உறுப்பினர்கள் இல்லாத நிலை உருவாகி உள்ளது.