< Back
தேசிய செய்திகள்
பீகாரில் நிதிஷ்குமார் அரசு பெரும்பான்மையை நிரூபித்தது
தேசிய செய்திகள்

பீகாரில் நிதிஷ்குமார் அரசு பெரும்பான்மையை நிரூபித்தது

தினத்தந்தி
|
25 Aug 2022 2:45 AM IST

பீகாரில் நிதிஷ்குமார் அரசு பெரும்பான்மையை நிரூபித்தது. சட்டசபையில் இருந்து பா.ஜ.க. வெளிநடப்பு செய்தது.

நிதிஷ்குமார் புதிய அரசு

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் கட்சி கடந்த 9-ந் தேதி அதிரடியாக வெளியேறியது. பீகார் முதல்-மந்திரி பதவியை விட்டு நிதிஷ் குமார் விலகினார்.

அதைத்தொடர்ந்து அவர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து புதிய அரசை மறுநாளிலேயே (10-ந் தேதி) அமைத்தார். அவருடன் துணை முதல்-மந்திரியாக லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் பதவி ஏற்றார். அடுத்த சில நாட்களில் நிதிஷ்குமார் தனது மந்திரிசபையை விரிவாக்கம் செய்தார். புதிதாக 31 மந்திரிகள் பதவி ஏற்றனர்.

சட்டசபை சிறப்புக்கூட்டம்

நிதிஷ் குமார் தலைமையிலான புதிய அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக பீகார் சட்டசபையின் சிறப்புக்கூட்டம் நேற்று நடந்தது. தன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளாமல், பா.ஜ.க.வை சேர்ந்த சபாநாயகர் விஜய்குமார் சின்கா பதவி விலகினார். இதனால் ஐக்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த துணை சபாநாயகர் மகேஷ்வர் ஹசாரி சபைக்கு தலைமை தாங்கினார்.

முதல்-மந்திரி நிதிஷ் குமார் நம்பிக்கை தீர்மானம் தாக்கல் செய்தார். அதன் பேரில் விவாதம் நடந்தது.

'பா.ஜ.க.வுக்கு 3 மருமகன்கள்'

விவாதத்தில் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டு பேசும்போது, "பா.ஜ.க.வுக்கு சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என 3 மருமகன்கள் உள்ளனர். தனது வசதிக்கு அவர்களை பா.ஜ.க. பயன்படுத்துகிறது. தங்களுக்கு அடி பணியாதவர்களுக்கு எதிராக இவர்களை பா.ஜ.க. தவறாக பயன்படுத்துகிறது" என சாடினார்.

விவாதத்துக்கு பதில் அளித்து முதல்-மந்திரி நிதிஷ் குமார் பேசினார். அப்போது பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களில் சிலர் சபையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் சபையில் இருந்து பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தனது பதில் உரையின்போது, எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராகலாம் என்ற லட்சியத்தில்தான் அணி மாறி உள்ளார் என்ற பா.ஜ.க.வின் குற்றச்சாட்டை நிதிஷ்குமார் திட்டவட்டமாக மறுத்தார்.

பெரும்பான்மை நிரூபணம்

தொடர்ந்து நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 160 எம்.எல்.ஏ.க்கள் வாக்கு அளித்தனர். எதிராக ஒரு வாக்குகூட விழவில்லை. ஆளும் கூட்டணியில் இல்லாத ஒவைசி கட்சியின் ஒற்றை எம்.எல்.ஏ.வும் அரசுக்கு ஆதரவாக வாக்கு அளித்தார்.

எனவே நிதிஷ் குமார் அரசு நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றி பெற்றது. பெரும்பான்மையை நிரூபித்தது.

சபாநாயகர் தேர்தல்

அதைத் தொடர்ந்து சபையை வெள்ளிக்கிழமைவரை துணை சபாநாயகர் ஒத்திவைத்தார். சபாநாயகர் தேர்தலுக்கு வியாழக்கிழமை (இன்று) வேட்பு மனு தாக்கல் நடைபெறும் எனவும் அவர் அறிவித்தார்.

மேலும் செய்திகள்